தற்போதைய செய்திகள்

தமிழ்நாடு முத்திரை சட்டம் விரைவில் அமலுக்கு வரும் – சட்டப்பேரவையில் அமைச்சர் கே.சி.வீரமணி அறிவிப்பு…

சென்னை:-

தமிழ்நாடு முத்திரை சட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்தார்.

சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானிய கோரிக்கை விவாதங்களுக்கு அமைச்சர் கே.சி.வீரமணி அளித்த பதிலுரை வருமாறு:-

தமிழ்நாடு அரசின் மொத்த வரி வருவாயில், 80 விழுக்காட்டிற்கு மேல், தன் பங்காக அளித்து, தமிழ்நாடு அரசின் வருவாய் உட்கட்டமைப்பின் தூணாக விளங்கும், வணிகவரித் துறை, இருக்கும் இடம் தெரியாதபடி, சத்தமில்லாது, அதிக வருவாய் ஈட்டித் தருகிறது. “ஒரே நாடு, ஒரே சந்தை, ஒரே வரி” என்ற கோட்பாட்டின் அடிப்படையில், நாடு முழுவதும் 1.7.2017 முதல், சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டமானது, செயலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த புதிய ஜி.எஸ்.டி வரி முறையினை அமல்படுத்துவதனால், உற்பத்தி மாநிலமான தமிழ்நாட்டிற்கு, எந்த விதமான வருவாய் இழப்பும் ஏற்படக்கூடாது என்ற தொலைநோக்கு சிந்தனையுடன், “இந்த புதிய வரிச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது, ஒரு தன்னிச்சையான இழப்பீடு வழங்கும் அமைப்பினை, அரசியல் சாசனத்திலேயே திருத்தம் மேற்கொள்ளப்பட்டு கொண்டு வரப்பட வேண்டும்” என, அம்மா அவர்கள், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார்.

இதன் விளைவாக, 2015-2016ம் நிதியாண்டில் வசூலிக்கப்பட்ட வரி வருவாயினை அடிப்படையாகக் கொண்டு, 14 சதவீத வளர்ச்சி விகிதத்தில், 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு, மத்திய அரசு ஒப்புக் கொண்டது. அம்மா அவர்களது ஆற்றல்மிக்க முயற்சியின் காரணமாகவே, தமிழகத்திற்கு ஏற்படவிருந்த வரி வருவாய் இழப்பு, தவிர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தின் கீழ், 30.06.2017 அன்றுள்ளவாறு, 6 லட்சத்து 38 ஆயிரம் வணிகர்கள் மட்டுமே, பதிவு செய்திருந்தனர். ஆனால், சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் அமலாக்கத்திற்கு பிறகு, மாநிலத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட வணிகர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து, இன்றளவில் 10 லட்சத்து 30 ஆயிரம் ஆக உள்ளது.

இந்த புதிய ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையினை, முதலமைச்சர் எடப்பாடிகே.பழனிசாமி தலைமையிலான அம்மாவின் அரசு, மிகவும் சிறப்புடன் செயல்படுத்துவதன் காரணமாக, 2018-2019ம் நிதியாண்டில், வணிகவரித் துறை ரூ.87,905.26 கோடி வரி வசூலித்துள்ளது. இது, அதற்கு முந்தைய ஆண்டான 2017-2018ம் ஆண்டு வசூலிக்கப்பட்ட தொகையான, ரூ.73,148.28 கோடியை விட, ரூ.14,756.98 கோடி கூடுதலாக வசூலிக்கப்பட்டு, 20.17 சதவீத வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது.

தமிழ்நாட்டிற்குள்ளும், தமிழகத்தை விட்டு வெளியிலும் சரக்குகளை கொண்டு செல்லும் வணிகர்கள், மின்னணு வழிப்பட்டியினை (இ-வே பில்), இணையதள வழியாக தாமாகவே பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாட்டிற்குள், ரூ.1 லட்சத்திற்கு கீழ் மதிப்பு கொண்ட சரக்குகளை கொண்டு செல்லும் பட்சத்தில், மின்னணு வழிப்பட்டி பெறப்பட வேண்டிய அவசியமில்லை. அதே போன்று, தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு, ரூ.50,000க்கு கீழ் மதிப்பு கொண்ட சரக்குகளை கொண்டு செல்லும் பட்சத்தில், மின்னணுவழி பட்டி பெறப்பட வேண்டிய அவசியமில்லை.

அத்தியாவசியமான 100 பொருட்களுக்கு, மின்னணு வழி பட்டி முற்றிலுமாக பெறப்பட வேண்டிய அவசியமில்லை. 5.7.2019 வரையில், தமிழ்நாட்டிற்குள் சரக்குகளை கொண்டு செல்லும் நேர்வுகளில் சுமார் 2 கோடியே 59 லட்சம் மின்னணு வழி பட்டிகளும், இடை மாநில சரக்குகள் விநியோகிப்பில் சுமார் 4 கோடியே 5 லட்சம் மின்னணு வழி பட்டிகளும், வணிகர்களால் பெறப்பட்டுள்ளது.

கரூர், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பெரும்பான்மையான வணிகர்கள், ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டு வருவதன் காரணமாக, அவர்கள் பயன்பெறும் வகையில், புதிதாக “ஈரோடு வணிகவரி கோட்டம்”, 1.6.2019 முதல் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இருந்து வந்த “செயலாக்கப் பிரிவானது”, தற்போது “புலனாய்வு பிரிவு” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜி.எஸ்.டி சட்டத்திற்கு ஏற்ப, இந்த புலனாய்வு பிரிவு, அரசுக்கு வர வேண்டிய உரிய வருவாயினை கண்காணிக்கவும், வரி ஏய்ப்பு நிகழா வண்ணம் பார்த்துக் கொள்ளும் வகையிலும் செயல்படும்.

வணிகர்கள் நலனை கருத்தில் கொண்டு, ரூ.10 கோடியினை தொகுப்பு நிதியாகக் கொண்டு, வணிகர் நல வாரியம் செயல்பட்டு வருகிறது. இவ்வாரியத்தின் வாயிலாக, குடும்ப நல உதவி, மருத்துவ உதவி, தீவிபத்து உதவி மற்றும் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள், உரிய சான்றிதழ்களின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன.

சென்ற ஆண்டு, கடும் வெள்ளத்தால் கேரள மாநிலம் பாதிப்படைந்திருந்த போது, தமிழ்நாடு சார்பாக பல்வேறு உதவிப் பொருட்கள், நமது மாநிலத்தில் கொள்முதல் செய்யப்பட்டு, கேரள அரசுக்கு வழங்கப்பட்டது. இது நமது மாநிலத்தில் உள்ள வணிகர்களுக்கு பெரும் உதவியாகவும், கேரள மாநில மக்களுக்கு உதவி செய்வதற்கு ஒரு வாய்ப்பாகவும் அமைந்தது. இந்த செயலானது, தமிழ்நாடு அண்டை மாநிலங்களுக்கு உறுதுணையாக இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

பணியாளர்களுக்கு பணி செய்வதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கவேண்டும் என்பதும், வருகை புரியும் வணிகர்களுக்கு போதுமான வசதிகள் செய்துகொடுக்க வேண்டும் என்பதும், அரசின் கொள்கை ஆகும். எனவே, தனியார் கட்டடங்களில் இயங்கும் வணிகவரித்துறை அலுவலகங்களுக்கு, சொந்த கட்டடங்கள் தேவை என்பதைக் கருத்தில் கொண்டு, பல்வேறு இடங்களில் இயங்கும் வணிகவரித்துறை அலுவலகங்களுக்கு, சொந்த கட்டடங்கள் கட்டுவதற்கு, கணிசமான நிதி ஒதுக்கீடும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வணிகவரித் துறையால் வசூலிக்கப்படும் மொத்த வரி வருவாயில், 1 சதவீதத்துக்கும் குறைவாகவே, துறையின் நிர்வாகத்திற்கென செலவாகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது, அம்மா அவர்கள், சொத்து பரிமாற்றங்களுக்கு அடிப்படையான சந்தை வழிகாட்டி மதிப்பு குறைக்கப்படும் என, தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தார். அம்மா அவர்களின் இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியால் கடந்த 9.6.2017 முதல் தமிழ்நாடு முழுவதும் சந்தை வழிகாட்டி மதிப்பு, 33 சதவிகிதம் குறைத்து ஆணையிடப்பட்டது. அம்மா அரசின் இந்த நடவடிக்கையால், தமிழக மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.

முத்திரைத் தீர்வை விதிப்பதற்காக, நமது மாநிலத்திற்கென தனியாக முத்திரைச் சட்டம் இயற்றப்படும் என புரட்சித்தலைவி அம்மா அவர்களால் சட்டமன்றப் பேரவையில் விதி 110ன் கீழ் அறிவிக்கப்பட்டது. இந்த உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில், தமிழ் நாடு முத்திரைச் சட்டம் சட்டமன்றப் பேரவையில் 7.1.2019 அன்று இயற்றப்பட்டு, மேதகு குடியரசுத் தலைவரின் இசைவினைப் பெறுவதற்காக, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் இசைவினைப் பெற்றவுடன், தமிழ்நாடு முத்திரைச் சட்டம் அமலுக்குக் கொண்டு வரப்படும்.

நமது நாடு கண்டுள்ள விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக, பொது மக்கள் தங்களுக்குத் தேவையான சொத்து தொடர்பான வில்லங்கச் சான்று மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் சான்றிட்ட நகல்களை, இணையதளம் மூலமாகவே விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளும் முறை, பதிவுத்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள், சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் வர வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டுள்ளதுடன், இந்த சான்றுகளை உடனுக்குடன் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பதிவுத்துறைக்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணங்களை, இணையதளம் மூலமாக செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளதால், போலி முத்திரைத் தாள்களின் புழக்கம், அறவே ஒழிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அரசிற்கு ஏற்பட்ட வருவாய் இழப்பும் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து தனது அயராத உழைப்பால் தமிழகத்தின் முதலமைச்சராக உயர்ந்து, மக்களோடு மக்களாக இணைந்து மக்களாட்சி நடத்தி வரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, பதிவுத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் எவ்வித குறைபாடும் இன்றி மக்களுக்கு சேவை புரியும் மக்கள் நேயப் பணிகளாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியதன் பேரில், பதிவுத் துறை சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.