சிறப்பு செய்திகள்

தி.மு.க. கட்சியே அல்ல கார்ப்பரேட் கம்பெனி – முதலமைச்சர் கடும் தாக்கு

விழுப்புரம்

தி.மு.க. ஒரு கட்சியே அல்ல, அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அதில் கருணாநிதி குடும்பத்தினர் தான் இடம் பெற முடியும். தொண்டர்களுக்கு இடம் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடுமையாக சாடினார்.

விக்கிரவாண்டி தொகுதி கழக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமிநேற்று பல்வேறு இடங்களில் சூறவாளி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். முதலமைச்சர் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் வெள்ளமென திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரச்சாரத்தின்போது முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். அவருடைய மறைவுக்கு பின்னர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இந்த இயக்கத்தை பல்வேறு இன்னல்கள், தொல்லைகளுக்கு இடையே கட்டிக்காத்து மிகப்பெரிய ஒரு இயக்கமாக, இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவாக்கி பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தினார்.

புரட்சித்தலைவி அம்மாவின் சமூக நலத்திட்டங்கள் தான் இன்றைய தினம் இந்தியாவே பின்பற்றுகின்ற அளவுக்கு சாதனை படைத்து உள்ளது. உலக நாடுகள் கூட அம்மாவின் திட்டங்களை பாராட்டுகின்றன. அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. உயர் கல்வித்துறையில் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது. விவசாயத்துறையிலும், தானிய உற்பத்தியிலும் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

யாரும் எந்த குறையும் சொல்ல முடியாத அளவுக்கு தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக பாராட்டுகின்ற அளவுக்கு செயல்பட்டு கொண்டிருக்கிறது. அம்மா அவர்கள் செயல்படுத்திய திட்டங்களைத் தான் என்னுடைய தலைமையிலான அரசும் தொடர்ந்து செயல்படுத்தி கொண்டிருக்கிறது. இந்த அரசை பார்த்து நாள்தோறும் பொய்யான குற்றச்சாட்டுகளை காழ்ப்புணர்ச்சியோடு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். என்னை பார்த்து விபத்தால் முதலமைச்சரானவன் என்று சொல்கிறார்.

நான் எதிர்பாராத விதமாகவோ, விபத்தின் காரணமாகவோ முதலமைச்சராக வில்லை. அடிமட்ட தொண்டனாக இருந்து, தலைமைக்கு விசுவாசமாக இருந்து உழைத்து படிப்படியாக உயர்ந்து முதலமைச்சராகி இருக்கிறேன். ஆனால் தி.மு.க.வில் அப்படி யாராவது ஒரு தொண்டன் சாதாரண ஒரு விவசாயி முதலமைச்சர் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? இதையெல்லாம் எண்ணிப் பார்க்காத ஸ்டாலின் கழக ஆட்சியை பற்றி நாள்தோறும் பொய்யான புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்.

இன்றைய தினம் தமிழகம் அனைத்து துறைகளிலும் தலைசிறந்து விளங்குகிறது. அம்மா அவர்கள் கொண்டு வந்த மழை நீர் சேகரிப்பு திட்டம் போல் குடிமராமத்து திட்டம் மக்கள் இயக்கமாக மாறி தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஏரிகள், குளங்கள், தூர் வாரப்பட்டு ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாமல் இருப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

விக்கிரவாண்டி தொகுதியில் எங்கெல்லாம் தடுப்பணை கட்டவேண்டும் என்று இத்தொகுதி மக்கள் விரும்புகிறார்களோ அதையெல்லாம் உங்களின் அரசு நிச்சயம் செய்து கொடுக்கும். நீங்கள் கழக ேவட்பாளரை வெற்றி பெற செய்வதன் மூலம் இத்தொகுதிக்கு மிகப்பெரிய நன்மையை செய்யப் போகிறீர்கள். இந்த ஆட்சி தி.மு.க. ஆட்சியை போல மைனாரிட்டி உறுப்பினர்களை கொண்டு நடத்தப்படும் ஆட்சி அல்ல. மெஜாரிட்டி உறுப்பினர்களை வைத்துக் கொண்டு நடைபெறும் ஆட்சியாகும். இதை புரிந்து கொள்ளாமல் ஸ்டாலின் வாய்க்கு வந்தபடி ஏதேதோ பேசுகிறார். கழக ஆட்சியில் இன்று நாங்கள் செய்து வரும் சாதனைகளை பட்டியலிட்டு சொல்கிறோம்.

அதே நேரத்தில் தி.மு.க. ஆட்சியில் என்னென்ன திட்டங்களை அமல்படுத்தினீர்கள். அவை எந்த அளவுக்கு மக்களுக்கு பயன்படக்கூடியதாக அமைந்துள்ளன என்பதை பட்டியலிட ஸ்டாலின் தயாராக இருக்கிறரா?வீராணம் திட்டம் கொண்டு வந்தீர்கள்.அதில் நடைபெற்ற ஊழல் காரணமாக பாதியிலேயே நின்று விட்டது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீண்டும் பதவிக்கு வந்த பின்னர் தான் புதிய வீராணம் திட்டத்தை கொண்டு வந்து இன்று சென்னை மாநகருக்கு குடிநீர் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க வழிவகை செய்திருக்கிறார். அதேபோல் மாவட்டம் தோறும் ஒரு மருத்துவக் கல்லூரி வேண்டும் என்பது தான் கழக அரசின் லட்சியமாக உள்ளது. அதற்காக நாம் மத்திய அரசை வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம்.

இதையெல்லாம் எண்ணிப் பார்க்காமல் குறை சொல்வதையே தனது வாழ்க்கையின் லட்சியமாக கருதி மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் ஸ்டாலின். அவருக்கு இத்தொகுதி மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.