இந்தியா மற்றவை

அயோத்தியில் இன்று முதல் டிச.10 வரை 144 தடை உத்தரவு.

அயோத்தி

அயோத்தி ராம ஜென்மபூமி-பாபர் மசூதி நில விவகார வழக்கில் இந்த வாரம் இறுதிக்கட்ட வாதங்கள் முடிவடைய இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை அயோத்தி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை அயோத்தி மாவட்ட நிர்வாகம் நேற்று நள்ளிரவு பிறப்பித்தது.அயோத்தியில் உள்ள பாபார் மசூதி அமைந்திருக்கும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் உரிமை கோரினர். இந்த வழக்கில் கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பளித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் 3 தரப்பினரும் இடத்தை சரிசமமாகப் பிரித்துக்கொள்ள உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து 14 மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷன், எஸ்ஏ.நஸீர் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் நாள்தோறும் உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வாதங்களைக் கேட்டு வருகிறது. இந்து மற்றும் முஸ்லிம் தரப்பினர் தங்கள் வாதங்களை வரும் 17-ம் தேதிக்குள் முடித்துக்க கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முஸ்லிம் தரப்பினர் வரும் 14-ம் தேதி (இன்று) வாதத்தை முடிக்க வேண்டும். அடுத்த இரு நாட்களில் இந்து தரப்பினர் தங்கள் வாதத்தை முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தசரா விடுமுறைக்குப் பின், உச்ச நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) மீண்டும் செயல்படத் தொடங்கும்போது அயோத்தி வழக்கின் இறுதி வாதங்கள் நடைபெறும்.

நவம்பர் மாதம் 17-ம் தேதிக்குள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் ஓய்வு பெற இருப்பதால், அதற்குள் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிசம்பர் 10-ம் தேதி வரை அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் அனுஜ்குமார் ஜா நேற்று நள்ளிரவு பிறப்பித்தார்.இதன்படி அயோத்தியில் அனுமதியின்றி ஆள் இல்லா குட்டி விமானங்கள் பறக்கவிடுவது, படகுகளில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றுவது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு பட்டாசுகள் விற்பனை செய்யவும், வெடிக்கவும் மாவட்ட நிர்வாகத்தின் உரிய அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அயோத்தி கோயிலில் சர்ச்சைக்குரிய பகுதியில் தீபாவளி அன்று விளக்குகள் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று விஸ்வ இந்து பரிசத் அமைப்பு அனுமதி கோரியுள்ளது.

விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் மூத்த தலைவர் மகந்த் நயன் தாஸ் கூறுகையில், “அயோத்தி முழுவதும் தீபாவளி அன்று விளக்குகளால் ஜொலிக்கும்போது, ஏன் ராமர் கோயில் மட்டும் இருட்டாக இருக்க வேண்டும். ஆதலால் அங்கு தீபாவளி அன்று விளக்கு ஏற்ற அனுமதி கேட்போம்” என்று தெரிவித்தார்.

இதற்கு எதிராக அயோத்தி வழக்கில் மனுதாரராக இருக்கும் ஹாரி மெகபூப் கூறுகையில், “சர்ச்சைக்குரிய இடத்தில் விளக்கு ஏற்றினால், முஸ்லிம்களை அங்கு தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.ஆனால், அயோத்தியில் கோயில் அமைந்திருக்கும் சர்ச்சைக்குரிய இடத்தில் விளக்கு ஏற்றவோ அல்லது தொழுகை நடத்தவோ அனுமதிப்பது குறித்து அதிகாரிகள் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.