தமிழகம்

மார்ச் 22-ம் தேதி சென்னை மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்

மார்ச் 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தி வைக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகில் இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 2.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனைத் தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், பொழுதுபோக்குப் பகுதிகள் என அனைத்தும் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற வேண்டும் என தனியார் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. மத்திய அரசு ஊழியர்களும் சுற்று அடிப்படையில் வீடுகளில் இருந்து பணியாற்றக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் வரும் 22-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் “மக்கள் ஊரடங்கு” பிறப்பிக்கப்படுவதாகவும், மக்கள் காலை 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை வீட்டிலேயே இருந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமையன்று முழு அளவில் மக்கள் வீடுகளில் இருக்கும் வகையில் பல மாநில அரசுகள், தனியார் நிறுவனங்கள் என பல தரப்பிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையன்று சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், ”22-ம் தேதி கடைப்பிடிக்கப்படும் மக்கள் ஊரடங்கு உத்தரவு நடவடிக்கையின் எதிரொலியாக சென்னை மெட்ரோ ரயில் சேவை, ஒரு நாளுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களைக் காக்கவும், அன்றைய தினம் மக்களை வீடுகளிலேயே இருக்கச் செய்யவும் இந்த நடவடிக்கையை மெட்ரோ ரயில் நிர்வாகம் எடுத்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.