திருநெல்வேலி

ஸ்டாலினின் பொய் வாக்குறுதிகளை மக்கள் இனி நம்ப தயாராக இல்லை – முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி பேச்சு

திருநெல்வேலி:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் பொய்யான, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை தமிழக மக்கள் இனியும் நம்ப தயாராக இல்லை என கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.ஆர்.சிவபதி கூறினார்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனை ஆதரித்து கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.ஆர்.சிவபதி தளபதி சமுத்திரம் பகுதிகளில் வீடு, வீடாக சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து கழக அரசின் சாதனைகளை எடுத்துச்சொல்லி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலை போன்று பொய்யான, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை சொல்லி நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுவிடலாம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். தமிழக மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்கள் மூலம் மு.க.ஸ்டாலின் உணர்ந்து கொள்வார்.

விவசாய குடும்பத்தில் பிறந்து, விவசாயிகளின் கஷ்டங்களை நன்கு உணர்ந்து விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த விவசாயிகளுக்காக பல திட்டங்களை செயல்படுத்திவரும், ஏழைகளின் தோழன் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் கரத்தை வலுப்படுத்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறசெய்ய வேண்டுகிறேன்.

இவ்வாறு கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.ஆர்.சிவபதி பேசினார்.