தற்போதைய செய்திகள்

கோழைத்தனமாக நீதிமன்றத்தை கெஞ்சி கூத்தாடியவர் ஸ்டாலின் – அமைச்சர் சி.வி.சண்முகம் கடும் தாக்கு

கடலூர்

உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திராணியில்லாமல் கோழைத்தனமாக நீதிமன்றத்தை கெஞ்சி கூத்தாடியவர் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையாக சாடினார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அண்ணா தி.மு.க. சார்பில் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஸ்டாலினையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்தார்.

வர இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் கழகம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற வேண்டும். அதற்கு கழக செயல்வீரர்கள், நிர்வாகிகள் கடுமையாக பணியாற்ற வேண்டும். கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். தி.மு.க. ஒரு கார்பரேட் கம்பெனியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதன் கூட்டணி கட்சிகள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்ட கொள்கை உடைய கட்சிகளாக உள்ளன.

கழக அரசை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எதற்கெடுத்தாலும் கழக அரசு தான் பொறுப்பு என்பது போல் ஸ்டாலின் பேசி வருகிறார். இடைத்தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெற்றதால் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் பயப்படுகின்றன. அதனால் தான் கோழைத்தனமாக நீதிமன்றத்தை நாடி கெஞ்சி கூத்தாடினார்கள். ஆனால் உச்சநீதிமன்றம் தி.மு.க.வுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் சரியான சாட்டையடி கொடுத்து விட்டது.

உள்ளாட்சித் தேர்தலில் அவர்கள் சரியான மரண அடி பெற போகிறார்கள். பொங்கல் பரிசு தொகுப்பு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒன்றாகும். அத்திட்டத்தை முதலமைச்சர் ஏற்கனவே தொடங்கி வைத்து விட்டார். மக்களுக்கு நல்லது செய்வதை ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் யாரையாவது ஏவி விட்டு நீதிமன்றத்துக்கு சென்று அதை தடுக்க சதி செய்கிறார். ஆனால் தி.மு.க.வின் கெட்ட எண்ணத்துக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

இக்கூட்டத்தில் அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.