தற்போதைய செய்திகள்

பிலிப்பைன்சில் தவிக்கும் இந்திய மருத்துவ மாணவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் – மக்களவையில் ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி. வலியுறுத்தல்

புதுடெல்லி

பிலிப்பைன்ஸ் நாட்டில் தவிக்கும் இந்திய மருத்துவ மாணவர்களை தனி விமானங்களை அனுப்பி பத்திரமாக மீட்க வேண்டும் என்று மக்களவையில் ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி. வலியுறுத்தினார்.

தேனி நாடாளுமன்ற உறுப்பினரும், கழக மக்களவைக் குழுத் தலைவருமான ப.ரவீந்திரநாத்குமார் மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் பேசியதாவது:-

நூற்றுக்கணக்கான தமிழக மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கக்கான இந்திய மருத்துவ மாணவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் தாயகம் திரும்பி வர இயலவில்லை. உலக அளவில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு இருப்பதால், இந்திய மருத்துவ மாணவர்கள் எல்லாம் அங்கே கொரோனா தாக்குதலுக்கு உட்படுவோமோ என்ற அச்சத்தில் உறைந்து போயிருக்கிறார்கள்.

இரு தினங்களுக்கு முன்பு மலேசிய விமான நிலையத்தில் சிக்கிக் கொண்ட 120 இந்திய மாணவர்களை மீட்டது போல், பிலிப்பைன்ஸ் நாட்டில் தற்போது சிக்கி நெருக்கடியான சூழலில் மாட்டிக் கொண்டுள்ள இந்திய மருத்துவ மாணவர்களை தனி விமானங்களை அனுப்பி பத்திரமாக மீட்பதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி. பேசினார்.