விழுப்புரம்

வாக்காளர்கள் காலில் விழுந்து ஓட்டு கேட்ட கழக எம்.எல்.ஏ.

விழுப்புரம்

விக்கிரவாண்டி தொகுதியில் கழக எம்.எல்.ஏ. வி.பன்னீ்ர்செல்வம் வீடு வீடாக சென்று பெரியவர்களின் காலில் விழுந்து வணங்கி கழகத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டார். அவர் உருக்கத்துடன் கழகத்திற்கு வாக்கு கேட்டபோது அங்கிருந்த பெரியவர்கள் மனம் நெகிழ்ந்தனர்.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இரு தொகுதிகளில் தற்போது தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து உள்ளது. கழக வேட்பாளர்களை ஆதரித்து கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் அமைச்சர்களும், கழக நிர்வாகிகளும், கிராமம் கிராமமாக சென்றும், வீதி வீதியாக சென்றும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதி கழக வேட்பாளர் எம்.ஆர்.முத்தமிழ்செல்வனை ஆதரித்து கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் காணை ஒன்றியம் கடையம் ஊராட்சியில் வீடு வீடாக சென்று வாக்காளர்களின் காலில் விழுந்து வணங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டார். இதைப்பார்த்த வாக்காளர்கள் மனம் நெகிழ்ந்து போயினர். கண்டிப்பாக இரட்டை இலைக்கு தான் நாங்கள் வாக்களிப்போம் என்று உறுதி அளித்தனர்.

பிரச்சாரத்தின்போது திருவண்ணாமலை மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் துரை, பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, புதுப்பாளையம் ஒன்றிய கழக செயலாளர் புருசோத்தமன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் சென்றனர்.