தற்போதைய செய்திகள்

ஓட்டுக்காக கபட நாடகம் ஆடுகிறார் மு.க.ஸ்டாலின் – முன்னாள் அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் கடும் தாக்கு

திருநெல்வேலி

ஓட்டுக்காக மு.க.ஸ்டாலின் கபட நாடகம் ஆடுகிறார் என கழக மருத்துவரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் எம்.மணிகண்டன் எம்.எல்.ஏ. கூறினார்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனை ஆதரித்து கழக மருத்துவரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் எம்.மணிகண்டன் எம்.எல்.ஏ. நாங்குநேரி தொகுதி அழகப்பாபுரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

எதிர்க்கட்சி தலைவர் மு.கஸ்டாலினுக்கு ஓட்டு கேட்டு வரும் நேரங்களை தவிர மற்ற நேரங்களில் மக்களை பற்றிய கவலை கிடையாது. முதலமைச்சராவதற்கு ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது? இரண்டடி திருக்குறளை சொல்ல தெரியாதவர் தமிழ் மொழி காப்பாளர் போல் பேசுகிறார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஏழைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறார். சமீபத்தில் கூட வெளிநாடுகள் சென்று ரூ.8800 கோடிக்கு முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார். தமிழகத்தின் வளர்ச்சிக்கு அல்லும், பகலும் பாடுபடும் முதலமைச்சரை பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு எள்ளளவும் தகுதி கிடையாது.

பதவி ஆசையில் ஸ்டாலின் பல பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். தனக்கு பின்னால் எனது குடும்ப உறுப்பினர்கள் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என சொல்லிக்கொண்டு தன் மகன் உதயநிதியை இளைஞரணி செயலாளராக்கி உள்ளார். ஓட்டுக்காக இந்து மக்களை இழிவாக பேசுவார். கூட்டணி அமைக்க கோடிகளை ஒதுக்குவார். டீக்கடையில் டீ குடிப்பது போல விளம்பரம் தேடுவார். கலர் கலராக டீ சர்ட் அணிந்து ரீல் விடுவார். மொத்தத்தில் பொய்யின் மொத்த உருவமாக ஸ்டாலின் திகழ்கிறார். இனியும் ஸ்டாலினை நம்ப மக்கள் தயாராக இல்லை. தேர்தல் நேரத்தில் ஸ்டாலின் ஓட்டுக்காக கபட நாடகம் ஆடுகிறார்.

இவ்வாறு டாக்டர் எம்.மணிகண்டன் எம்.எல்.ஏ. பேசினார்.