தற்போதைய செய்திகள்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை – தமிழகம்- ஆந்திர எல்லையில் அமைச்சர்கள் நேரில் ஆய்வு

திருவள்ளூர்

திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள தமிழகம் – ஆந்திர எல்லையில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், க.பாண்டியராஜன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு விழிப்புணர்வு பணிகளை, வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழ் ஆட்சி மொழி, கலைபண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஷ்ரா, அரசு முதன்மை செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையருமான டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜெகன்நாதன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.

இதன் பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

மாநிலத்தில் உள்ள 86 சோதனை சாவடிகளில் மனிதர்களின் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, வெளிமாநில வாகனங்களில் கிருமி நாசினிகள் தெளித்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 48,824 வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதில் பயணம் செய்த 1,11,009 நபர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். 59,435 பள்ளிகள், 2319 கல்லூரிகள், 52,967 அங்கன்வாடி மையங்கள், திரையரங்குகள், பார்கள், வணிக வளாகங்கள், 15499 பேருந்துகள் மற்றும் ரயில்களில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டுள்ளது. தனியார் பணிமனைகள், பேருந்து பணிமனைகள், தொழிற்சாலைகள், தனியார் ஆம்னி பேருந்துகள் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது.

மாநில அரசின் காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சி துறை, நகராட்சித் துறை மற்றும் இதர துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். கைகளை சோப்பு போட்டு கழுவுதல், சுற்றுப்புறத்தை கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்து, சுய கட்டுப்பாட்டினை கடைப்பிடித்தாலே இந்த கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுத்து விடலாம்.

மக்கள் பீதியோ எந்தவித அச்சமும் கொள்ள தேவையில்லை, பொதுமக்கள் கவனமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும். அமைச்சர்களாகிய நாங்களே முன்னின்று வந்து செய்வது காரணம் பொதுமக்கள் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக நேரில் பொன்பாடி சோதனை சாவடியில் நேரில் ஆய்வு மேற்கொண்டோம்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

முன்னதாக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், க.பாண்டியராஜன் ஆகியோர் மாவட்டத்தின் எல்லைப் பகுதியான பொன்பாடி சோதனை சாவடியில் ஆந்திர மாநிலங்களிலிருந்து வரும் ஒவ்வொரு வாகனங்களில் தாங்களே முன்நின்று கிருமி நாசினிகள் தெளித்து, கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசங்களையும் வழங்கி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காவல்துறை வாகனத்தின் ஒலிப்பெருக்கி மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக வாகனத்தில் வரும் பொதுமக்களிடையே பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன், திருத்தணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.எம்.நரசிம்மன், மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரா.பன்னீர்செல்வம், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சொர்ணம் அமுதா ஆகியோர் உடனிருந்தனர்.