தற்போதைய செய்திகள்

மு.க.ஸ்டாலின் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

திருநெல்வேலி, அக். 16-

மு.க.ஸ்டாலின் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனை ஆதரித்து கே.டி.சி. நகரில் கழக அம்மா பேரவை செயலாளரும், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தீவிர பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நாங்குநேரி தொகுதி கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் மிகவும் எளிமையானவர். இவரை பொதுமக்களாகிய நீங்கள் எளிதில் அணுகலாம். ஆனால் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ரூபி மனோகரனை சாதாரண மக்கள் பார்க்க முடியாது. அவரை பார்க்க வேண்டும் என்றால் சென்னைக்கு தான் செல்ல வேண்டும்.

நாங்குநேரி தொகுதியில் திண்ணைப் பிரச்சாரம் செய்த ஸ்டாலின் 8 ஆண்டுகளாக மகளிர் குழுக்களுக்கு சரி வர கடன் கொடுக்கவில்லை என்றும் திமுக ஆட்சிக் காலத்தில் தான் அதிகமாக கடன் வழங்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் 6 லட்சத்து 75 ஆயிரம் மகளிர் சுய குழுக்கள் உள்ளன. கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் ரூ.52,628 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் கூட ரூ.12,500 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவை அனைத்தும் தெரிந்தும் ஸ்டாலின் குறை சொல்வது வேடிக்கையாக உள்ளது.

இந்த தொகுதியில் கடந்த 3 ஆண்டுகளில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இங்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வசந்தகுமார் தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இது கூட தெரியாமல் ஸ்டாலின் பேசுகிறார். மக்களை எப்படியாவது குழப்பி ஓட்டு வாங்க வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். அது ஒருபோதும் நடக்காது.

தி.மு.க. ஆட்சியில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு இருந்தது என்று வாய் கூசாமல் உளறி வருகிறார். திமுக ஆட்சிக்காலத்தில் பெண்கள் இதுபோன்று ரோட்டில் சுதந்திரமாக நடந்து சென்றது உண்டா? தற்போது திமுக ஆட்சி இல்லை. ஆனாலும்கூட திமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அழகு நிலையத்தில் புகுந்து பெண்களை தாக்கியதை மக்கள் அறிவார்கள். அதேபோல் கோயிலில் தேங்காய் கடை வைத்திருந்த பெண்ணையும் ஓசி தேங்காய் கேட்டு தாக்கியுள்ளனர். இப்படி தி.மு.க. நிர்வாகிகள் பெண்களை தாக்குவதை மறைத்து ஏதோ தாய்மார்களிடம் அக்கறை கொண்டது போல் பேசி ஸ்டாலின் நாடகமாடுகிறார். எனவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

ஏற்கனவே இங்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் உங்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. ஆனால் நாங்கள் அப்படி கிடையாது. இந்த தொகுதியாக ஒரு தன்னிறைவு பெற்ற தொகுதியை மாற்றுவது தான் எங்களின் லட்சியம். எனவே பொய் பிரச்சாரம் செய்து வரும் தி.மு.க., காங்கிரசுக்கு தேர்தலில் பாடம் புகட்டி கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இந்த பிரசாரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், கே.மாணிக்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தவசி, பாண்டியம்மாள், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன், கழக அம்மா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், மாவட்ட துணை செயலாளர்கள் அய்யப்பன், பஞ்சம்மாள் மாவட்ட இலக்கிய அணி திருப்பதி, ஒன்றிய கழக செயலாளர் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், ராஜா, பிச்சைராஜன், செல்லப்பாண்டி , ரவிச்சந்திரன், லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.