தற்போதைய செய்திகள்

பள்ளூரில் நவீன அரிசி ஆலை அமைக்க அரசு பரிசீலனை – சு.ரவி எம்.எல்.ஏ. கேள்விக்கு அமைச்சர் ஆர்.காமராஜ் பதில்

சென்னை 

நெமிலி ஒன்றியம் பள்ளூரில் நவீன அரிசி ஆலை அமைக்க அரசு பரிசீலனை செய்யும் என்று கழக சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி கேள்விக்கு அமைச்சர் ஆர்.காமராஜ் பதிலளித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது அரக்கோணம் கழக சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி பேசியதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டம் முதலமைச்சரால் புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டம். இந்த மாவட்டத்திலே உள்ள நெமிலி ஒன்றியம், பாதி சோளிங்கர் தொகுதியும், பாதி அரக்கோணம் தொகுதியையும் கொண்டது.

இன்றைக்கு ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியத்தில் இதுவரை 45 கொள்முதல் நிலையங்கள் உள்ளன. அதில் 25 நேரடி கொள்முதல் நிலையங்கள் நெமிலி ஒன்றியத்தில் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. காரணம் நெமிலி ஒன்றியம் முழுக்க, முழுக்க நெல் சாகுபடி நடைபெறுகிற பகுதியாகும். அந்த பகுதி மக்கள் விவசாயத்தை முழுவதுமாக நம்பி உள்ளார்கள்.

நெமிலி ஒன்றியத்தின் மைய பகுதியான பள்ளூர் ஊராட்சியில் 11 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. அந்த இடத்தில் நவீன ஆலை அமைக்க வேண்டும் என்று அமைச்சரிடம் கேட்டேன். அவரும் இடம் கிடைகின்ற பட்சத்தில் பரிசீலிக்கப்படும் என்று நல்ல பதிலை அளித்துள்ளார். தற்போது அரசு இடம் தயாராக உள்ளது. இந்த பகுதியில் நவீன அரிசி ஆலையை கொண்டு வந்தால் அருகாமையில் உள்ள நியாயவிலை கடைகளுக்கெல்லாம் அரிசி வழங்கலாம். கூலி விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவே அமைச்சர் இந்த கூட்டத்தொடரிலேயே அரக்கோணம் தொகுதியில் உள்ள பள்ளூர் ஊராட்சியில் ஒரு நவீன அரிசி ஆலையை கொண்டுவர முன் வருவாரா?

இவ்வாறு ரவி எம்.எல்.ஏ. பேசினார்.

இதற்கு உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பதிலளிக்கையில், தமிழகம் முழுவதும் அதி நவீனமயமாக்கப்பட்ட 21 நவீன அரிசி ஆலைகள் இயங்கி கொண்டிருக்கின்றன. தேவை இருக்கும் பகுதிகளில் அவ்வப்போது அரசு நவீன அரிசி ஆலை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே உறுப்பினர் குறிப்பிட்ட நெமிலி ஒன்றியத்தில் முன்னுரிமை அடிப்படையில் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார்.