தற்போதைய செய்திகள்

‘அம்மா ஆம்புலன்ஸ்’ திட்டத்தின் மூலம் நேரிடையாக கால்நடைகளுக்கு சிகிச்சை – பேரவையில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பெருமிதம்

சென்னை

அம்மா ஆம்புலன்ஸ் திட்டத்தின் மூலம் நேரிடையாக கால்நடைகள் இருக்கும் இடத்திற்கே சென்று சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று பேரவையில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பெருமிதத்துடன் கூறினார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, பூந்தமல்லி தொகுதி உறுப்பினர் கிருஷ்ணசாமி பேசுகையில், பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட கொமக்கம்பேடு ஊராட்சியில் கால்நடை கிளை நிலையம் அமைக்க அரசு முன் வருமா? என்று கேட்டார்.

இதற்கு கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பதிலளித்து பேசியதாவது:-

முதலில் கால்நடை கிளை நிலையம் தொடங்கப்பட்ட பின் மருந்தகம் தொடங்கப்படும். அதன் பின்னர் தான் அது
மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். உறுப்பினர் கூறும் பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட கால்நடை அலகுகள் இல்லை. இருந்தபோதிலும் அது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்தியாவிலேயே பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழக கால்நடைத்துறை திகழ்கிறது. கால்நடை பராமரிப்புத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்க கிராமங்களுக்கே மருத்துவர்கள் நேரிடையாக செல்கின்றனர். அதற்காக தான் அம்மா ஆம்புலன்ஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, கால்நடை இருக்கும் பகுதிக்கே சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது.

1069 என்ற எண்ணிற்கு போனில் அழைத்தால் அங்கு நேரிடையாக சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு கால்நடைகளின் காப்பாளனாக திகழ்கிறது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் மக்களுக்கு ஆடு, மாடுகளை விலையில்லாமல் வழங்கி உள்ளது இந்த அரசு.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர் கே.என்.நேரு, நாட்டின பசுக்கள் குறைந்த அளவு பால் கறக்கின்றன. ஜெர்சி போன்ற பசுக்கள் மூலம் அதிக அளவில் பால் கறக்கிறார்கள். அதில் கொழுப்பு சத்து குறைவாக உள்ளது. பஞ்சாப், அரியானா, குஜராத் போன்ற மாநிலங்களில் உள்ள நாட்டின பசுக்கள் 10 லிட்டர் வரை பால் கொடுப்பதோடு, அதில் 6 சதவீத கொழுப்பு சத்து உள்ளது. எனவே அத்தகைய நாட்டின பசுக்களை தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதற்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பதிலளிக்கையில், பசுக்கள் அதிக அளவு பால் கொடுப்பதற்காக நாட்டின பசுக்களுக்கு எந்த மாதிரியான ஊட்டச்சத்துக்களை எந்த அளவு கொடுக்கலாம் என்று ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அது தொடர்பாக கருத்தினை பெற ஆய்வாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம். அதே போல் உள்நாட்டு நாட்டின பசுக்கள் மட்டுமல்லல, பிற மாநிலங்களி லிருந்து நாட்டின பசுக்களை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்.