தற்போதைய செய்திகள்

சட்டமன்றம் நடைபெற்று கொண்டிருந்தால் தான் மக்களின் அச்ச உணர்வை போக்க முடியும் – பேரவையில் முதலமைச்சர் விளக்கம்

சென்னை

தமிழகத்தில் கொரோனா வைரசை தடுக்க தொடர் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே யாரும் அச்சப்பட வேண்டியதில்லை என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம் அளித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  சட்டப்பேரவையில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அளித்த விளக்கம் வருமாறு:-

எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர்களும் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவர் எல்லாம் கொரோனா வைரஸ் குறித்து அச்சங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எப்படி மேற்கொள்ள வேண்டும் என்ற விவரங்களையும் இங்கே தெரிவித்திருக்கின்றார்கள். அரசு நிலைப்பாட்டை இங்கே நான் குறிப்பிட விரும்புகின்றேன். எனது தலைமையிலான மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், இது வரை 4 முறை கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தி தினசரி நிலவரங்களை அறிந்து, பல்வேறு உத்தரவுகளை உடனுக்குடன் வழங்கி வருகின்றது.

பொது சுகாதாரச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கவும், நிலைமைக்கு ஏற்றாற்போல் நடவடிக்கை எடுக்கவும், தலைமைச் செயலாளர் தலைமையில், ஒரு சிறப்பு பணிக் குழு (Special Task Force) அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் “செய்யக் கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை” பற்றியும், தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்வது பற்றியும் பெரிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

31.3.2020 வரை அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், சுற்றுலாத் தலங்கள், ஆன்மீகத் தலங்கள், வாரச் சந்தைகள், மிகப் பெரிய ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் உள்ளிட்ட மக்கள் அதிக அளவில் கூடும் இடங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பெரிய அளவிலான கூட்டங்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 2 லட்சம் பயணிகள் பரிசோதிக்கப்பட்டு, அதில் 2 ஆயிரத்து 984 பயணிகள் வீடுகளில் கண்காணிக்கப்பட்டும், 32 பயணிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும், ஆய்வகப் பரிசோதனைக்குப் பின்னர், நோய் உறுதி செய்யப்பட்ட 3 நபர்களுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, அதில் ஒருவர் வீடு திரும்பியுள்ளார். மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிர நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

போதுமான அளவு நிதி ஒதுக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக பொது மக்கள் கூடும் இடங்களிலும், பொதுப் போக்குவரத்து வாகனங்களிலும், தீவிர நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீதிமன்றங்களுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதுமான அளவு தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பிரிவுகளை ((Isolation Ward) மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை கண்டறிந்து, அதற்குத் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.

மத்திய அரசு மற்றும் அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் (ICMR) வழிகாட்டுதலின்படி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை துரிதமாக செயல்பட்டு வருகிறது. பாரதப் பிரதமர் 19.3.2020 அன்று வெளியிட்ட 9 அம்ச நோய்த் தடுப்பு வழிமுறைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து தீவிரமாக கடைபிடித்து வருகிறது. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வருகின்ற பயணிகள் அனைவரையும் பரிசோதித்து, நோய்த் தொற்று அறிகுறி உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். அவருடன் பயணம் செய்த பிறர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, நம் மருத்துவர்கள் அவர்களை காணொலிக் காட்சி மூலமாக தொடர்ந்து கண்காணித்து தேவையான மருத்துவ அறிவுரைகளையும், ஆற்றுப்படுத்துதலையும் வழங்கி வருகின்றனர்.

தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அரசு எடுக்கும் தடுப்பு நடவடிக்கைகள் தங்களை சுயமாகவும், முழுமையாகவும் ஈடுபடுத்திக் கொண்டு கொரோனா தொற்று நோய் தமிழ்நாட்டில் பரவாமல் இருக்க ஒத்துழைக்க வேண்டும். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை முடிக்கிவிட மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து பல்வேறு துறைகளுக்கு 60 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், கிருமி நாசினிகள், முககவசங்கள், கவச உடைகள், காலணிகள் ஆகியவை சம்பந்தப்பட்ட துறையில் வாங்கி மருத்துவம் மற்றும் களப்பணியாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.

தற்போது சட்டப்பேரவைக் கூட்டம் நடந்து வரும் நிலையில், தலைமைச் செயலகத்திற்கு உள்ளே வரும் அனைத்து வாகனங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவருக்கும் உடல் வெப்ப அளவைக் கண்டுபிடித்தும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. பல்வேறு சிரமங்களுக்கிடையே கொரோனா வைரஸ் தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அர்ப்பணி உணர்வோடு பணி மேற்கொண்டு வரும் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகிய அனைவருக்கும் இத்தருணத்தில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதுமட்டுமல்லாமல், எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார். சட்டமன்றத்தை ஒத்திவைக்க வேண்டுமென்று. சட்டமன்றம் நடைபெற்று கொண்டு இருந்தால் தான் நாட்டினுடைய நிலைமை மக்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும். அதற்காகத் தான் சட்டமன்றம் கூடுகிறது. ஆகவே, மக்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகளை இங்கே தான் விவாதிக்க முடியும். நீங்கள் கூட என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்ற விவரத்தை சொல்லுகின்றீர்கள் என்றால், சட்டமன்றம் நடைபெற்று கொண்டு இருக்கின்ற காரணத்தினால் தான் நீங்கள் இங்கே தெரிவிக்கின்றீர்கள். அதற்குண்டான நடவடிக்கைகள் நாங்கள் எடுக்கின்றோம்.

ஆகவே, மக்கள் பணியாற்றுவதற்காகத் தான் நாம் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பி இருக்கின்றார்களே தவிர, நாம் இங்கே கூடியதால் நோய் ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை. ஏன் என்று சொன்னால், இது வெளிநாட்டில் இருந்தும், வெளி மாநிலத்தில் இருந்து தான் இங்கே இந்த தொற்று நோய் நம்முடைய பகுதிக்கு வருகின்ற காரணத்தினால், அதை தடுக்கின்ற பணியிலே அரசு முழு மூச்சுடன் ஈடுபட்டு கொண்டு இருக்கிறது. அந்த விவரத்தை தான் நான் இங்கே முழுமையாக தெரிவித்திருக்கின்றேன்.

இன்னும் சில கருத்துக்களை சொன்னார்கள். சிறு தொழில் பாதிக்கப்பட்டு இருக்கின்றது என்று சொன்னீர்கள். எந்த சிறு தொழிற்சாலைகளும் மூடப்படவில்லை. இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றது. அதில் அச்சப்பட வேண்டியதில்லை. தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணியாற்றுவதற்கு தொழிலாளர் நலத் துறை மூலமாகவும், அதேபோல நம்முடைய தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத்தும் அதனுடைய துறை செயலாளரும் தகுந்த அறிவுரைகளை வழங்கி இருக்கின்றார்கள். அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு, இந்த நோய் தடுப்பு நடவடிக்கைகளில் முழுவதும் அவர்கள் தெரிந்து கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்றைக்கு எந்தெந்த இடத்தில் எல்லாம் அதிகமான மக்கள் கூடுகிறார்கள் என்ற விவரத்தை எல்லாம் நான் ஏற்கனவே தெரிவித்தேன். ஏற்கனவே நான்கு முறை கூட்டங்கள் கூட்டப்பட்டு, அந்த கூட்டத்திலே மூத்த அமைச்சர்கள், துறையினுடைய அமைச்சர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் எல்லாம் கலந்து ஆலோசித்து, முடிவெடுத்து, அந்த முடிவின் அடிப்படையில் வேகமாக, துரிதமாக நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. இது எல்லாம் வெளிநாட்டிலிருந்தும், வெளி மாநிலத்திலிருந்தும் வந்தவர்களை பரிசோதனை செய்து, அந்த பரிசோதனையின் அடிப்படையிலே அவர்கள் நோய் கண்டறியப்பட்டால், அவர்களை தனிமைப்படுத்தி, அதற்குண்டான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதில் கூட ஒருவருக்கு பூரண குணமாகி வீடு திரும்பி இருக்கின்றார். அவரோடு வந்தவர்களுக்கு எல்லாம், அவர்களையும் வீட்டிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, காணொலிக்காட்சி மூலமாக அவர்களை தொடர்பு கொண்டு, அவர்களது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கேட்டறிந்து, அதற்கு தேவையான சிகிச்சை அளித்து கொண்டு இருக்கிறார்கள். யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. இது ஒரு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்கு தான் அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் சொன்னார். அமெரிக்கா, இத்தாலி தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காத காரணத்தினால் தான் அந்த நோய் அங்கு பரவிவிட்டது. அதற்கு பிறகு தான் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் அப்படி அல்ல. தமிழகத்தில் இருக்கின்ற யாரும் வரவில்லை. நேற்றைய தினம் கூட, நம்முடைய உறுப்பினர் அவர்கள் சொன்னார்கள், மலேசியா, பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து வர வேண்டும், அப்படி வருகின்றவர்களுக்கு தான் இந்த நோய் இருக்கின்றது. இங்கே இருப்பவர்களுக்கு இல்லை. ஆகவே, நாம் உணர்வுபூர்வமாக நம்முடைய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டிலிலே பணிபுரிய சென்றவர்கள், ஏதாவது நோய்வாய் பட்டுவிட்டால் அவர்களுடைய பெற்றோர்கள் அச்சப்படுகின்றார்கள்.

அங்கே படிக்கின்ற மாணவர்களுக்கும், பணியில் இருக்கின்றவர்களும் அச்சப்படுகின்றார்கள். அது இயற்கை தான். ஆகவே, தனது தாய்நாட்டிற்கு செல்ல வேண்டும் என்ற விருப்பத்தின் பேரிலே அவர்கள் நம்முடைய நாட்டிற்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்து, அதன் அடிப்படையிலே மத்திய அரசிற்கு வேண்டுகோள் விடுத்து, அவர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். அப்படி அழைத்து வரப்படுபவர்களுக்குத் தான் அந்த நாட்டில் நோய் தொற்று இருக்கின்ற காரணத்தினாலே, இங்கே பரிசோதனையிலே கண்டுபிடித்து, தனிமைப்படுத்தப்பட்டு, குணப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கின்றோமே தவிர, தமிழ்நாட்டில் இருந்து ஒருவருக்கு கூட இந்த கொரோனா வைரஸ் ஏற்படவில்லை என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

அச்சப்பட வேண்டியதில்லை. முழுமையான பரிசோதனை செய்யப்படுகிறது. நான் கூறியது போல, ரயில், விமானம், பேருந்து ஆகியவற்றின் மூலம் வருகின்றவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. மற்ற மாநிலங்களிலிருந்து நமது மாநிலத்திற்கு வருகின்ற போது, நம்முடைய மாநில எல்லையிலே தடுத்து நிறுத்தி, பரிசோதனை செய்து, அந்த பரிசோதனையிலே ஏதாவது நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அவர்களை Isolation Ward-லே சேர்க்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இப்படி சட்டமன்றம் நடைபெற்று கொண்டு இருந்தால் தான், மக்களுடைய அச்ச உணர்வை போக்க முடியும். இதன்மூலமாக செய்தி வெளியே வரும், அரசாங்கம் என்னென்ன நடவடிக்கைகள் என்ற செய்தி வெளியே போகும். அதேபோல், மக்களிடத்தில் இருக்கின்ற பிரச்சனைகள் எதிர்க்கட்சி மூலமாக அரசிற்கு கொண்டு வந்து, அரசு அதற்குரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பதை எதிர்க்கட்சி தலைவருக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம் அளித்து பேசினார்.