தமிழகம்

தேனி மாவட்டத்தில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி – சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை

தேனி மாவட்டத்தில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

சட்டப்பேரவையில்  முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:- 

1. 1.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 40 புதிய கால்நடை கிளை நிலையங்கள் தோற்றுவிக்கப்படும். மேலும், 3.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 கிளை நிலையங்கள், கால்நடை மருந்தகங்களாகவும், 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
5 கால்நடை மருந்தகங்கள், கால்நடை மருத்துவமனைகளாகவும், 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாகர்கோவில் கால்நடை மருத்துவமனை, 24 மணி நேரமும் செயல்படும் முதல்தர சேவைகள் வழங்கும் கால்நடை பன்முக மருத்துவமனையாகவும் தரம் உயர்த்தப்படும்.

2. கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பை வணிக ரீதியில் மேற்கொள்ளும் 1,925 பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்தில் தலா 1,000 கோழிக் குஞ்சுகள், ஒரு மாதத்திற்கான கோழித் தீவனம் மற்றும் குஞ்சு பொரிப்பகம் அமைத்துக் கொடுக்க 14.73 கோடி ரூபாய் வழங்கப்படும்.

3. விவசாயிகளின் பொருளாதார இழப்பினைத் தவிர்க்கும் வகையில், 90.35 லட்சம் கால்நடைகளுக்கு 22.03 கோடி ரூபாய் செலவில் கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும்.

4. ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலையத்தில் உள்ள ஆட்டம்மை தடுப்பூசி மருந்து உற்பத்திப் பிரிவு, 18.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நல் உற்பத்தி நடைமுறைகள் தரத்திற்கு தரம் உயர்த்தப்படும்.

5. தேனி மாவட்டத்தில் ஒரு புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.