தற்போதைய செய்திகள்

குடிமராமத்து திட்ட பணிக்கு தேவைப்படும் நிதி ஒதுக்கீடு – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்…

மதுரை:-

குடிமராமத்து திட்ட பணிகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் எட்டுநாழி கண்மாய் மற்றும் கரிசல்குளம் கண்மாய்களில் தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ் குடிமராமத்துப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் த.சு.ராஜசேகர் தலைமையில், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  துவக்கி வைத்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:-

மன்னர் ராஜராஜசோழன் காலத்திலிருந்து குடிமராமத்துப்பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயி மகனான முதலமைச்சர் விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் குடிமராமத்துப் பணியினை தொடங்கி வைத்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

பொதுப்பணித்துறை சார்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மூன்று கட்டமாக குளம், கண்மாய் தூர்வாரப்பட்டுள்ளது. உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏரி, குளம், கண்மாய்கள் தூர்வார முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனடிப்படையில் இன்று திருமங்கலம் ஊராட்சியில் இரு கண்மாய்கள் தலா ரூ.7 லட்சம் செலவில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

அம்மா அவர்கள் அறிவித்த மழைநீர் சேகரிப்புத்திட்டம் எவ்வாறு மக்கள் இயக்கமாக உருவெடுத்ததோ, அதுபோல் குடிமராமத்து திட்டமும் மக்களின் பங்களிப்போடும், மக்களின் பேராதரவோடும் நடைபெற்று வருகிறது. இப்பொழுது நடைபெறும் குடிமராமத்துப் பணியின் மூலமாக எதிர்வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பருவமழையின் போது மழைநீரை சேகரித்து வைக்க எளிதாக அமையும்.

குடிமராமத்து திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் 318 சிறு பாசன கண்மாய்களும், 1576 ஊரணிகள் அனைத்தும் தூர்வாரப்பட உள்ளது. சிறப்பு நிதியின் மூலமாக கண்மாய்களுக்கு ரூ.15.90 கோடியும், ஊரணிகளுக்கு ரூ15.76 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேவையின் அடிப்படையில் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் கூடுதலாக அமைப்பு பணிகளுக்காக தேவைப்பட்டால் சிறுபாசன கண்மாய்களுக்கு ரூ.5 லட்சமும், ஊரணிகளுக்கு ரூ.2 லட்சமும் எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் எஸ்.பி.அம்ரித், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் , ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் அனுராதா, திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செல்லத்துரை, திருமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் சூரியகாந்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.