தற்போதைய செய்திகள்

நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை முதல்வர் உருவாக்குவார் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி…

மதுரை:-

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் வெற்றி பெற்றுள்ளது. எனவே நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை நிச்சயம் முதல்வர் உருவாக்குவார் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற அம்மாவின் லட்சியங்களை நிறைவேற்றும் வண்ணம் பல்வேறு திட்டப் பணிகளை முதலமைச்சர் செய்து வருகிறார். அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருந்து வருகிறார்.

புரட்சித்தலைவி அம்மா உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார். அதனைத்தொடர்ந்து 2-ம் உலக முதலீட்டாளர் மாநாட்டை முதலமைச்சர் நடத்தினார். அதில் மூன்று லட்சம் கோடிக்கு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அதில் பங்கேற்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் எங்கள் நாட்டிற்கு நீங்கள் வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் அமைச்சர்கள் ,மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆகியோருடன் முதலமைச்சர் வெளிநாடு பயணம் மேற்கொண்டார்.

அதற்கு ஸ்டாலின் பல்வேறு விமர்சனம் செய்தார். ஆனால் ஸ்டாலின் கேள்விக்கு எல்லாம் சம்பட்டி அடி கொடுக்கும் வகையில் லண்டன் போன்ற நாடுகளில் பல்வேறு தொழிலதிபர்கள் ஆர்வமுடன் பல்வேறு ஒப்பந்தங்களை முதலமைச்சர் முன்னிலையில் போட்டுள்ளனர்.

மேலும் புகழ்பெற்ற கிங்ஸ் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று மருத்துவம் சார்ந்த பல்வேறு ஒப்பந்தங்களை முதலமைச்சர் செய்தார். அது மட்டுமல்லாது தமிழகத்தில் தொழில் தொடங்கும் வண்ணம் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

முதலமைச்சரின் இந்த இந்தப் பயணத்தின் மூலம் பல்வேறு தொழில் முதலீடுகளைப் பெற்று ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவார். இதே ஸ்டாலின் பலமுறை வெளிநாடு சென்ற போதுஅவர் பயணத்தை எல்லாம் யாரிடம் சொல்லவில்லை. ஏனென்றால் தனது உடலை பாதுகாக்க தனது உடலை அலங்கரிக்க செல்வார். ஆனால் இன்றைக்கு முதலமைச்சர் தமிழக மக்களின் முன்னேற்றத்துக்காக சென்றார்.

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் பல்வேறு வெற்றி செய்திகள் வருவதால் அதை கண்டு பொறுக்க முடியாமல் ஸ்டாலின் இதுபோன்ற பிரச்சாரங்கள் பரப்புகிறார். மக்கள் இதை ஒருபோதும் நம்ப மாட்டார்கள். ஏனென்றால் முதல் அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தின் செயல் திட்டங்கள் எல்லாம் ஊடங்களில் வெளிவருகிறது. ஆனால் இதே ஸ்டாலின் திமுக ஆட்சியில் போது வெளிநாட்டு சென்றதை வெளிப்படுத்தினரா?

அண்ணா, புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் தமிழகத்தின் தலைநிமிர எளிய மக்களின் வாழ்வு வளம் பெற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை முதலமைச்சர் உருவாக்குவார். எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் அடிக்கல் நாட்டினர் நிச்சயம் 50 மாதத்துக்குள் பணிகள் நிறைவேறும். ஆனால் வேண்டுமென்றே எதிர்கட்சிகள் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர்.

தமிழகத்தில் ஒரு கோடியே 94 லட்சம் குடும்பங்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. சிறப்பு பொது விநியோகத் திட்டத்திற்கு அப்போதைய காங்கிரஸ் அரசு மானியத்தை நிறுத்தியது. ஆனால் அம்மா தமிழக அரசு சார்பில் நிதியை வழங்கினார்.இதன் மூலம் அரிசி வாங்கும் அனைவருக்கும் ஒரு கிலோ துவரம்பருப்பு 30 ரூபாய்க்கும், ஒரு கிலோ பாமாயில் 20 ரூபாய் வழங்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து முதலமைச்சரும் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கி வருகிறார். இதற்காக ரூ.6000 கோடி அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஒரு கிலோ சீனி 25 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் ரேஷன் கடைகளில் சீனி வழங்குவது கிடையாது.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.