தற்போதைய செய்திகள்

உறுப்பினர்கள் இடத்தை தேர்வு செய்து தந்தால் நியாயவிலை கடை அமைத்து தரப்படும் – பேரவையில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உறுதி

சென்னை

சட்டமன்ற உறுப்பினர்கள் இடத்தை தேர்வு செய்து தந்தால் நியாயவிலை கடை அமைத்து தரப்படும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உறுதியளித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது திரு.வி.க.நகர் தொகுதி உறுப்பினர் தாயகம் கவி (எ) சிவக்குமார், திரு.வி.க. நகர் 75-வது வார்டு எஸ்.எஸ்.புரம் பகுதியில் நியாயவிலை கடை அமைக்க அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பதிலளித்து பேசியதாவது:-

நகர்ப்புற பகுதிகளில் ஒரு இடத்தில் நியாயவிலை கடை அமைக்க குறைந்தது 800 முதல் 1000 வரை குடும்ப அட்டைகள் தேவைப்படுகிறது. ஆனால் அந்த எஸ்.எஸ்.புரம் பகுதியில் 700 குடும்ப அட்டைகள் மட்டுமே உள்ளன. சென்னை பகுதிகளில் கூட்ட நெரிசல் இருக்கின்ற இடங்களில் பிரித்து புதியதாக ஒரு கடை அமைக்க இடம் கிடைப்பது கடினமாக உள்ளது.

கிடைக்கும் இடத்தில் வாடகை அதிகமாக கேட்கின்றனர். நிலத்தின் மதிப்பு அதிகமாக உள்ளது. ஆனால், இந்த பகுதியில் மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள் என்று உறுப்பினர் கூறியிருக்கிறார். எனவே, அவர் ஒரு இடத்தை ஒதுக்கிக் கொடுத்தால் நியாயவிலை கடை அமைக்க அரசு ஆவன செய்யும்.

சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையோர் தங்களது பகுதியில் பகுதிநேர நியாய விலை கடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து வருகின்றனர். ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாயிகள் பயன் பெறக்கூடிய வகையில் நடமாடும் நியாய விலைக்கடைகள் அமைப்பது குறித்து துறை ரீதியாக ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பதிலளித்தார்.