சிறப்பு செய்திகள்

வேளாண் கல்லூரிகளுக்கு ரூ.101 கோடியில் கூடுதல் விரிவுரை அரங்கம், ஆய்வகங்கள் : முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 30.1.2020 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான் மலையில் அமைந்துள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் விரிவுரை அரங்கம் மற்றும் ஆய்வகங்களை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், 89 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேளாண்மைத் துறை கட்டடங்களையும் திறந்து வைத்தார். வேளாண்மை சார்ந்த மனிதவளத்தை பெருக்கி, வேளாண்மை உற்பத்தியையும், உற்பத்தி திறனையும் அதிகரித்தல், தரமான வேளாண்மை கல்வியை அளித்தல், வேளாண்மை ஆய்வுகளில் முன்னோக்கி திட்டமிடுதல், உழவர்களுக்கும், வேளாண்மை அலுவலர்களுக்கும் தீவிர விரிவாக்கக் கல்வி மற்றும் பயிற்சிகள் மூலம் புத்தெழுச்சியை ஏற்படுத்துதல் ஆகிய பணிகளை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மூலமாக செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான் மலையில் அமைந்துள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் விரிவுரை அரங்கம் மற்றும் ஆய்வகங்களை காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

மேலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தஞ்சாவூர் மாவட்டம், ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் விரிவுரை அரங்கம் மற்றும் ஆய்வகங்கள்; புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையில் உள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 11 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயிற்சியாளர் விடுதிக் கட்டடம், ஆசிரியர் மையம், காவேரி நதி குடிநீர் திட்டத்தின் கீழ், 1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்கத் தொட்டிகள், தென் வெள்ளார் நதி பாசன திட்டத்தின் கீழ், 30 அடி விட்டம் 42 அடி ஆழம் கொண்ட கிணறு, 3 தரைதளத் தொட்டி மற்றும் 2700 மீட்டர் நீளமுள்ள இணைப்பு குழாய்கள்,

திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனூரில் உள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 6 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டடம், காணொலி ஆய்வகம், பயிற்சியாளர் விடுதிக் கட்டடம் மற்றும் ஆசிரியர் மையம், தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிகுளத்தில் உள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 12 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டடம், காணொலி ஆய்வகம், கூடுதல் விரிவுரை அரங்கம் மற்றும் ஆய்வகங்கள்,

வேளாண்மை இயக்குநரகத்தின் மூலமாக தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் நிதியுதவியுடன் புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஆகிய இடங்களில் தலா 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விதைசேமிப்புக் கிடங்குடன் கூடிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலமாக தொடர் விநியோக மேலாண்மை திட்டத்தின் கீழ், நபார்டு வங்கியின் கிடங்கு உட்கட்டமைப்பு நிதி உதவியுடன் திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் கோபால்பட்டி ஆகிய இடங்களில் உள்ள முதன்மை பதப்படுத்தும் நிலையங்களில் 18 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பதப்படுத்தும் கட்டடத்துடன் கூடிய அலுவலகம், குளிர்பதன கிடங்கு,

1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு, தரம் பிரிக்கும் மற்றும் சிப்பம் கட்டும் கூடம், விவசாயிகளுக்கான சேவை மையம், எடைமேடை மற்றும் கழிவறை, திண்டுக்கல் மாவட்டம் பழனி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 2 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதன்மை பதப்படுத்தும் நிலையத்துடன் கூடிய அலுவலகம், எடைமேடை, கடைகள் மற்றும் கழிவறை; தேனி மாவட்டம் தேனி, சின்னமனூர் மற்றும் கம்பம் ஆகிய இடங்களில் உள்ள முதன்மை பதப்படுத்தும் நிலையங்களில் 9 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பதப்படுத்தும் கட்டடத்துடன் கூடிய அலுவலகம்,

குளிர்பதன கிடங்கு, தரம் பிரிக்கும் மற்றும் சிப்பம் கட்டும் கூடம், வாகனம் நிறுத்தும் கூடம் மற்றும் கழிவறை; இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, கமுதி மற்றும் முதுகுளத்தூர் ஆகிய இடங்களில் உள்ள முதன்மை பதப்படுத்தும் நிலையங்களில் 8 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பதப்படுத்தும் கட்டடத்துடன் கூடிய அலுவலகம், குளிர்பதன கிடங்கு, விவசாயிகளுக்கான சேவை மையம், எடைமேடை, கடைகள் மற்றும் கழிவறை; திருவண்ணாமலை மாவட்டம் சேத்துபட்டு,

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆகிய இடங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் 4 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலா 2,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குகள், திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகத்துடன் கூடிய சேமிப்பு கிடங்கு மற்றும் உலர்களம்,

விதைச் சான்றளிப்பு மற்றும் அங்ககச் சான்றளிப்புத் துறை இயக்குநரகத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் நிதி உதவியுடன் 1 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூட்ட அரங்கம்,என மொத்தம் 99 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான வேளாண்மைத் துறை கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, தலைமைச் செயலாளர் க.சண்முகம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையர் எஸ்.ஜே.சிரு, வேளாண்மைத் துறை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் இயக்குநர் ந.சுப்பையன், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் என்.குமார், விதைச் சான்றளிப்பு மற்றும் அங்ககச் சான்றளிப்புத் துறை இயக்குநர் எம்.நாராயணசாமி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ், வேளாண்மைப் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் ஆர்.முருகேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.