தற்போதைய செய்திகள்

ஆண்டு முழுவதும் அம்மா பிறந்தநாள் விழா – திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழகம் முடிவு

திருவள்ளூர்

ஆண்டு முழுவதும் அம்மா பிறந்தநாள் விழாவை கொண்டாட திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழகம் முடிவு செய்துள்ளது.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் திருவள்ளூரில் உள்ள எம்.எஸ்.கே. திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் தி.பா.கண்ணன் தலைமை வகித்தார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி பலராமன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஊரகத் தொழில் துறை அமைச்சரும், மதுரவாயல் பகுதி கழக செயலாளருமான பா.பென்ஜமின், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன், திருத்தணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.எம்.நரசிம்மன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் அமைச்சர் பா.பென்ஜமின் பேசியதாவது:-

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற அனுபவத்தின் காரணமாக வருகின்ற தேர்தல் நமக்கு சவாலான தேர்தல். திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதியில் உள்ள வார்டு மெம்பர், பேரூராட்சி தலைவர்கள், நகர்மன்ற தலைவர், உறுப்பினர்கள், நகராட்சித் தலைவர்கள் என அனைத்திலும் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். இதற்கு நிர்வாகிகளாகிய நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். தமிழகத்தில் ஆள தகுதியான இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் நல் ஆளுமைக்கு பெயர் போன அரசாக இந்த அம்மாவின் அரசு திகழ்கிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை கழகத்தின் கிளை கழக செயலாளர் முதல் கழகத்தின் அடிமட்ட தொண்டர்கள் முதல் அனைவருமே தங்களுடைய பகுதிகளில் கழக கொடியை ஏற்றி அம்மா அவர்களின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்த வேண்டும். மேலும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். அண்ணா திமுக தொண்டனை மிஞ்சுவதற்கு இந்தியாவில் எந்த ஒரு தொண்டர்களுக்கும் திராணியில்லை.

அந்தளவுக்கு அண்ணா திமுக தொண்டன் உறுதி மனப்பான்மையோடு பணியாற்றுவான். எனவே வரும் மாநகராட்சி தேர்தலில் அனைத்து பகுதிகளிலும் தலைமை யாரை வேட்பாளராக அறிவிக்கிறதோ அவர்களுக்கு துணையாக இருந்து அவரது வெற்றிக்கு பாடுபடுங்கள். அந்த வெற்றியை அம்மாவின் பொற்பாதத்தில் சமர்ப்பிப்போம்.

இவ்வாறு அமைச்சர் பா.பென்ஜமின் பேசினார்.

இந்தியாவிலேயே தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரி பெற்றுத் தந்த முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமிக்கு கூட்டத்தில் நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72வது பிறந்தநாள் விழாவை மிக சிறப்பாக கொண்டாடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அம்மா அவர்களின் பிறந்த நாளை இந்த ஆண்டு முழுவதும் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றியம், நகரம் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் சிறப்பாக கொண்டாடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தரும் முதலமைச்சர் எட்ப்பாடி கே.பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.