சென்னை

ஊரக உள்ளாட்சித் தேர்தல், முதியோர்&மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க முன்னுரிமை : மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித் தலைவர், ஊராட்சி உறுப்பினர் என 4 பதவிகளுக்கும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடப்பதால் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலைமை அலுவலர் உட்பட 7 அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

மேலும் வாக்குப்பதிவு அன்று வாக்குச்சாவடிக்குள் வாக்குச்சாவடி அலுவலர்கள், தேவை ஏற்பட்டால் தலைமை வாக்குச்சாவடி அலுவலர் அனுமதியுடன் போலீசார், மாநில மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் பார்வையாளர்கள், வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள், வாக்காளர்கள், வாக்காளர்களுடன் வரும் கைக்குழந்தைகள், மாற்றுத் திறனாளியின் உதவியாளர் என 9 விதமான நபர்களை மட்டுமே அனுமதிக்கலாம்.

இதுதவிர மாநில தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டோரையும் அனுமதிக்கலாம். ஆண், பெண் வாக்காளர்களுக்கு தனித்தனி வரிசையை ஏற்படுத்த வேண்டும். ஆண், பெண்ணை மாறி, மாறி வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள், முதியோர் மற்றும் கைக்குழந்தைகளுடன் வரும் பெண்களுக்கு வாக்களிக்க முன்னுரிமை அளிக்க வேண்டுமென மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.