தற்போதைய செய்திகள்

உல்லாச பயணமாக வெளிநாடு செல்ல மாட்டோம்,மக்களுக்கு சேவை செய்வதே எங்கள் லட்சியம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முழக்கம்…

மதுரை:-

மக்களுக்கு சேவை செய்வதே எங்கள் லட்சியம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி தொகுதியில் உள்ள நக்கலப்பட்டி கிராமத்தில் ரூ.4.75 லட்சம் மதிப்பில் புதிய குடிநீர் மேல்நிலைத்தொட்டி திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதி தலைமை தாங்கினார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புதிய குடிநீர் தொட்டியை திறந்து வைத்து பேசியதாவது:-

ஸ்டாலின் கடந்த சில நாட்களாகவே குடிநீர் தொடர்பாக பல்வேறு பொய்யான அறிக்கைகளை விட்டு வருகிறார். குடிநீர் திட்ட பணிக்காக ஆக்கப்பூர்வ செயல்களை முதலமைச்சர் செய்து வருகிறார் ஆனால் ஸ்டாலின் அறிக்கை மட்டும் விட்டு சிங்கப்பூரில் கிளிகளுடன் கொஞ்சி விளையாடி வருகிறார்.

தமிழகத்தில் இயற்கை சீற்றங்களோ, வறட்சியோ ஏற்படும் போதெல்லாம் லண்டன், கேரளா போன்ற இடங்களுக்கு சென்று விடுவார். மக்கள் மீது பற்று இருந்தால் தமிழகத்தில் தானே இருக்க வேண்டும். நாங்கள் எல்லாம் இவரைப்போல் உல்லாசமாக செல்ல முடியாது. ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி மக்களுக்கு சேவை செய்வதே எங்கள் நோக்கமாகும் இதுதான் அம்மா எங்களுக்கு கற்றுக்கொடுத்த பாடம்.

சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்திற்கும், தற்போது கடும் குடிநீர் பஞ்சத்திற்கும் திமுக தான் காரணம் என்பதை நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். சென்னையை எடுத்துக்கொண்டால் நுங்கம்பாக்கம் ஏரி, இரட்டை ஏரி, வேளச்சேரி ஏரி, ஆவடி ஏரி, போரூர் ஏரி, பள்ளிகரணை ஏரி, மேடவாக்கம் ஏரி, தேனாம்பேட்டை ஏரி, பெரும்பாக்கம் ஏரி, பெருங்குளத்தூர் ஏரி, வில்லிவாக்கம் ஏரி, சிட்லபாக்கம் ஏரி, சேத்துபட்டு ஏரி, இப்படிப்பட்ட ஏரி, குளங்கள் திமுக ஆட்சியில் தான் அழிக்கப்பட்டது. 1906-ம் ஆண்டில் சென்னையில் 474 நீர்பிடிப்பு பகுதிகள் இருந்தன. திமுக ஆட்சியில் படிப்படியாக ஏரிகளை அழித்து தற்போது 43 நீர்பிடிப்பு பகுதிகள் தான் உள்ளன.

இது மட்டுமல்லாது காவேரி, முல்லைபெரியாறு போன்றவற்றில் தங்கள் குடும்ப உறுப்பினர்களும், தங்களின் பினாமிகளும் மத்திய அமைச்சரவையில் இருக்க வேண்டும் என்ற அதிகார பசியினால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை காவு கொடுத்தது திமுக. அதை மீட்டுக்கொடுத்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். முதலமைச்சர் அம்மாவின் வழியில் குடிநீர் திட்டத்திற்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறார். 2017-ம் ஆண்டு குடிநீர் மராமத்து பணி திட்டத்தை உருவாக்கினார். முதல் கட்டமாக ரூ.100 கோடியும், 2018-ம் ஆண்டு இரண்டாம் கட்டமாக ரூ.328 கோடியும் தற்போது 2019-ம் ஆண்டிற்கு ரூ.500 கோடியும் முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற முதலமைச்சர் மாநாட்டில் கோதாவரி, கங்கை, போன்ற நதிநீர் இணைப்பு திட்டத்தில் தமிழகத்தையும் பயனடையுமாறு நதிநீர் இணைப்பு திட்டத்தை வலியுறுத்தி காவேரியை சீர்படுத்த ரூ10,000 கோடி நிதியினை முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த 8 ஆண்டுகளில் குடிநீர் திட்டத்திற்காக ரூ.37,806 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் திமுக ஆட்சியில் வெறும் ரூ.7280 கோடி தான் ஒதுக்கப்பட்டது. தற்போது குடிநீருக்காக பல்வேறு திட்டங்களை இரவு பகல் பாராது முதலமைச்சரும், துணைமுதலமைச்சரும் செயல்படுத்தி வருகின்றனர். ஆனால் குடிநீருக்காக அறிக்கை மட்டும் கொடுத்து விட்டு தனக்கு வாக்களித்த கொளத்தூர் தொகுதி மக்களை கூட கண்டு கொள்ளாமல் சிங்கப்பூரில் பலூன் விட்டு ஆனந்தமாக பொழுதை போக்குகிறார் ஸ்டாலின்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணை செயலாளர்கள் ஐயப்பன், பஞ்சம்மாள், ஒன்றிய கழக செயலாளர்கள் ராஜா, பிச்சைராஜன், நகர செயலாளர்கள் பூமாராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.