சிறப்பு செய்திகள்

9-ந்தேதி முதல் ரூ.1000 பொங்கல் பரிசு – 12-ந்தேதிக்குள் அனைவருக்கும் வழங்கிட அரசு ஆணை

சென்னை

பொங்கல் பண்டிகையையொட்டி பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கத்தை குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 12-ந்தேதிக்குள் வழங்க வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புத் துண்டு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தவிர ஒவ்வொரு அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2020-ம் ஆண்டு பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட ரூ.1000 அரசால் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தை சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்த கீழ்கண்ட வழிமுறைகளை மாவட்ட ஆட்சியர்கள் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொங்கல் பரிசு மற்றும் ரொக்கத்தொகை ரூ.1000 ஆகியவற்றை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் உரிய முறையில் விநியோகம் செய்து முடிக்க வேண்டிய முழு பொறுப்பையும் மாவட்ட ஆட்சித் தலைவர்களை சாரும். சென்னையை பொறுத்தமட்டில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளரின் நேரடி கண்காணிப்பின் கீழ் துணை ஆணையர் (நகரம்) வடக்கு, தெற்கு அலுவலர்கள் இப்பணியை முழுமையாக செயல்படுத்த வேண்டிய பொறுப்பான அலுவலர்கள் ஆவார்கள்.

இப்பணியை 9.1.2020 முதல் தொடங்கி 12.1.2020-க்குள் முடிக்கவும், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் பொங்கல் ரொக்கத் தொகை பெறாத விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13.1.2020 அன்று பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகையினை வழங்கி இப்பணியினை முழுமையாக முடிக்க வேண்டும்.

* நியாயவிலை கடைகளில் அன்று நடைமுறையிலுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைகளுக்கும் மாவட்ட வாரியாக பொங்கல் பரிசுத் தொகுப்பு ஒதுக்கீடு செய்து ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

* இத்திட்டப்படி பொங்கல் பையும், ரொக்கத் தொகையும் திட்டமிட்டு முறையாக வழங்கும் ஒருங்கிணைப்பு பணிக்கான முழு பொறுப்பும் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர்கள், சென்னையில் உணவுப் பொருள் வழங்கல் ஆணையாளர் ஆகியோரின் பொறுப்பில் செயல்படுத்த வேண்டும். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநரும், கூடுதல் ஒருங்கிணைப்பாளர்களாக மாநில அளவில் செயல்படுவார்கள்.

* மாவட்ட ஆட்சியர்கள், துணை ஆணையாளர்கள், வருவாய்த்துறை, உணவுத்துறை, கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர்கள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு மேலாளர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் உரிய காலக்கெடுவிற்குள் நகர்வு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். குறுவட்டம் தோறும் வருவாய்த்துறை அலுவலர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்களை சிறப்பு மேற்பார்வை அலுவலர்களாக நியமித்து பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்கள் நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்யப்படுவது மற்றும் விநியோகம் செய்யப்படுவது குறித்து கண்காணிக்க உரிய ஏற்பாடுகள் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துணை ஆணையாளர் (நகரம்) வடக்கு, தெற்கு ஆகியோர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

* பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கமும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட இருப்பதால் அதனை பெறும் ஆர்வத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையில் நியாயவிலை கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதை தவிர்க்க பொங்கல் பரிசு விநியோகத்தை முறைப்படுத்தும் வகையில் தெரு வாரியாக உள்ள குடும்ப அட்டையின் எண்ணிக்கையின் அடிப்படையில் Staggering System மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

* பொங்கல் பையுடன் வழங்கப்படும் ரொக்கத் தொகை சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக வங்கி மூலம் செலுத்தப்படும். சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் தேவைப்படும் நிதியை தினந்தோறும் ரொக்கமாக பெற்று நியாய விலை கடைகளுக்கு வழங்க வேண்டும்.

* சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் 11 மாநகராட்சிகளாகிய கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி, திருப்பூர், தூத்துக்குடி, ஈரோடு, தஞ்சாவூர், திண்டுக்கல் மற்றும் வேலூர் ஆகிய மாநகராட்சி பகுதிகளிலுள்ள நியாய விலை கடைகளுக்கு பொங்கல் பரிசினை விரைந்து விநியோகம் செய்திட ஏதுவாக கூடுதல் பணியாளர்களை அமர்த்திட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ஏற்பாடு செய்ய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நியாயவிலை கடைகள் ஒரே இடத்தில் இயங்கினால் கூடுதலாக மேசை, நாற்காலிகளை அமைத்து பணியாளர்களையும் பணியமர்த்தி பொங்கல் பரிசுத் தொகுப்பு அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும். கூட்டத்தை ஒழுங்குபடுத்த தேவைக்கேற்ப காவல்துறையினரின் உதவியையும் பெற்று பயன்படுத்த வேண்டும்.

* நியாய விலை கடைகளில் சுழற்சி முறையில் தெரு வாரியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்வதற்கான அட்டவணையை தயார் செய்து குடும்ப அட்டைதாரர்கள் நன்கு அறியும் வண்ணம் முன்கூட்டியே நியாயவிலை கடைகளில் விளம்பரம் செய்ய வேண்டும். இறுதியாக விடுபட்ட அரிசி குடும்ப அட்டைகளுக்கு ஓரிரு நாட்கள் விநியோகம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

* பொங்கல் பரிசுத் தொகுப்பும் மற்றும் ரொக்கத் தொகை ரூ.1000-ம் ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும்.

* அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படும் ரூ.1000 ரொக்கப் பணத்தை இரண்டு 500 ரூபாய் தாள்களாக வெளிப்படையாக வழங்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் ரொக்கப் பணத்தை உறையில் வைத்து வழங்கக்கூடாது.

* பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ரூ.1000 ஆகியவற்றை மின்னணு குடும்ப அட்டை மூலமாகத் தான் வழங்க வேண்டும். அவ்வாறு குடும்ப அட்டை இல்லாத இனங்களில் அவர்களுக்கு அக்குடும்ப அட்டையில் உள்ள நபர்களில் ஏதேனும் ஒருவரின் ஆதார் அட்டையினை வைத்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச் சொல் (OTP) அடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கலாம். இதற்கான உரிய பதிவுகள் ஒப்புதல் படிவத்தில் பதிவுத் தாளில் குறிப்பிடப்பட வேண்டும்.பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ரூ.1000 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டதும் அவர்களது கைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

* குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதை உறுதி செய்யும் வண்ணம் ைகயொப்பத்துடன் ஒப்புதல் பெற வேண்டும்.

* நடைமுறையிலுள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விடுதலின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்பதையும், குடும்ப அட்டைதாரர்கள் எவ்வித சிரமமுமின்றி நியாய விலை கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம் என்பதையும், குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் வந்தாலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்பதையும் தெளிவுபடுத்தி நியாய விலை கடைகளில் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.

* சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் நாட்களில் நியாயவிலை கடைகள் உரிய நேரத்தில் திறக்கப்பட வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற வரிசையில் காத்திருக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விடுதலின்றி வழங்க வேண்டும். வரிசையில் காத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்கள் எவரையும் பொங்கல் பரிசத் தொகுப்பு வழங்காமல் திருப்பி அனுப்பக்கூடாது.

* பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்காக வருகின்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். மேலும் ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் வரிசையில் நின்று எவ்வித சிரமமும் இல்லாமல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

* இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட ஏதுவாக விநியோக அட்டவணை விவரத்தை காவல் துறைக்கு முன்கூட்டியே தெரிவித்து நியாய விலைக் கடைகளுகு்கு உரிய காவல்துறை பாதுகாப்பு அளிக்கவும், மாவட்ட காவல் கணிகாணிப்பாளரை கேட்டுக் கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

* ஒவ்வொரு மாவட்டத்திலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை விநியோகம் குறித்த புகார்களை பெறுவதற்கு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட வேண்டும். புகார்கள் ஏதுமிருப்பின் நடமாடும் கண்காணிப்பு குழுவிற்கு அதனை தெரிவித்து உடனுக்குடன் புகார்களை தீர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

* இப்பணி குறித்த புகார்கள் ஏதுமிருப்பின் அதனை தெரிவிக்க வேண்டிய வட்ட, மாவட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் இப்பணிக்கென நியமிக்கப்படும் சிறப்பு மேற்பார்வை அலுவலர்கள் (கட்டுப்பாட்டு அறை உள்பட) தொலைபேசி, அலைபேசி எண்களையும் தெரியப்படுத்த வேண்டும். (இதனை குடும்ப அட்டைதாரர்களுக்கு நன்கு தெரியும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும்).

* அரசின் இந்த திட்டம் குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக சென்றடைவதை கண்காணிக்க வட்ட அளவில் துணை ஆட்சியர் நிலை அலுவலர்களை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கண்காணிக்க கண்காணிப்பு அலுவலராக நியமிக்க வேண்டும். மேலும் இவர்களின் கீழ் நடமாடும் கண்காணிப்பு குழுக்களை நியமித்து கண்காணிக்க அறிவுரைகள் வழங்குதல் வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்ட அளவில் உள்ள கடைகளில் 10- 15 கடைகளுக்கு என துணை வட்டாட்சியர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிலையில் ஒரு அலுவலரை நியமித்து பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை சரியாக விநியோகம் செய்யப்படுகிறதா என்பதை கண்காணித்து ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை நடமாடும் குழுவில் உள்ள அலுவலரிடம் தவறாது தகவல் தெரிவிக்க வேண்டும்.

* பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை இருப்பு விவரம் சரி பார்க்கப்பட வேண்டும்.

* விநியோகிக்கப்பட இனங்களில் ஒப்புதல் பெறப்பட்ட விவரங்கள் சரிபார்க்கப்பட வேண்டும்.

* கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனுப்பப்படும் புகார்கள் உடனுக்குடன் சரி செய்யப்பட வேண்டும். தவறு காணப்படின் அலுவலர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்க வேண்டும்.

* பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை விநியோகிக்கப்பட்ட இனங்களை பரவலாக தணிக்கை செய்ய வேண்டும்.

* இத்திட்டத்தின் செயல்பாடு குறித்த முன்னேற்றத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தினமும் உன்னிப்பாக கண்காணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

* இப்பணிகள் காரணமாக பொது விநியோகத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அன்றாட பணிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படா வண்ணம் இச்சிறப்பு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டும்.

* தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நியாய விலை கடைகள் தவிர ஏனைய நிறுவனங்கள் நடத்தும் அனைத்து நியாய விலை கடைகளுக்கும் கூட்டுறவு சங்க பதிவாளரிடம் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகையை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.