தற்போதைய செய்திகள்

குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி…

சென்னை:-

குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தனியார் குடிநீர் டேங்கர் லாரி உரிமையாளர் சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் தலைமையில் எம்.ஆர்.சி நகர் நகர நிர்வாக அலுவலகத்தில்  நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

தனியார் குடிநீர் டேங்கர் லாரி உரிமையாளர்களிடம் பொதுமக்களுக்கு தனியார் டேங்கர் லாரிகள் மூலம் வழங்கப்படும் தண்ணீர் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக ஒருசில புகார்களும், செய்திகளும் வந்துள்ளன. எனவே, லாரி உரிமையாளர்கள் வாகனத்தின் டீசல் செலவு, ஓட்டுநரின் சம்பளம், சுங்கவரி, இதர செலவுகள் மற்றும் ஒவ்வொரு பகுதிக்கு ஏற்றவாறு நியாயமான கட்டணத்தை வசூலிக்க வேண்டும். வசூலிக்கப்படும் கட்டணம் எல்லா வாடிக்கையாளர்களிடமும் ஒரே சீராக சரியான அளவுடன் வழங்கப்படுகிறதா என்பதனை உரிமையாளர்கள் கண்காணிக்க வேண்டும்.

ஒருசில இடங்களில் கட்டணங்கள் அதிகம் என்று பொதுமக்கள் கருதுவதால், கட்டணங்கள் உடனடியாக குறைக்கப்பட வேண்டும். கல்குவாரிகளிலிருந்து நீரினை எடுத்து பொதுமக்களுக்கு வழங்கக் கூடாது. ஒரே ஆதாரத்திலிருந்து தினசரி நீர் எடுப்பதை தவிர்த்து ஒன்றுக்கு மேற்பட்ட நீர் ஆதாரத்திலிருந்து எடுக்க வேண்டும். பதிவு வரிசைப்படி குடிநீர் வழங்கப்படுகிறதா என்பதனை உரிமையாளர்கள் கண்காணிக்க வேண்டும். மேலும், தனியார் லாரி உரிமையாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், செய்ய அம்மாவின் அரசு தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தனியார் குடிநீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் அதிக கட்டணத்திற்கு குடிநீர் ,வழங்குவதில்லை என்றும், ஒருசில இடங்களில் இதுபோன்ற ஏதேனும் புகார்கள் இருப்பின் தங்கள் சங்கத்தின் சார்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாகவும், தமிழ்நாடு அரசும், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியமும், திருவள்ளூர், காஞ்சிரபுரம் மாவட்ட நிர்வாகமும் தங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை வழங்கி வருகிறது எனவும், அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் மாநில தனியார் குடிநீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் முழு ஒத்துழைப்பை அளிக்கும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் உறுதி அளித்தனர்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, அவர்களின் உத்தரவுக்கிணங்க மாநில தனியார் குடிநீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தனியார் குடிநீர் வாகனங்கள் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீர் கட்டணத்தை குறைக்கவும், அனைத்து பகுதிகளில் ஒரே சீராக முறைபடுத்தவும் ஆலோசணைகள் வழங்கப்பட்டது.

பெருநகர சென்னை மாநகர மக்களுக்கு தேவையான 525 எம்.எல்.டி குடிநீர் அன்றாடம் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு இருப்பதாக பல்வேறு தவறான வதந்திகள் ஒருசிலரால் பரப்பப்படுகிறது இதில் ஏதும் உண்மை இல்லை. தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த 2011 ஆம் ஆண்டிற்கு முன் தமிழகத்தில் பொதுமக்களுக்கு சுமார் 4000 மில்லியன் லிட்டர் குடிநீர் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. தமிழகத்தில் இன்றைய தேதியில், ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்து உள்ளது. எனினும், அம்மாவின் அரசு ஏற்படுத்திய பல்வேறு புதிய குடிநீர் திட்டங்களின் மூலமாக நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் பொதுமக்களுக்கு அன்றாடம் 7,300 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அம்மாவின் அரசு கடந்த காலங்களை விட பொதுமக்களுக்கு தற்போது, கூடுதலாக 2300 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கி வருகிறது.

மழை பொழிவு இல்லாவிடினும் சென்னை மாநகருக்கு தினமும் நெம்மேலி மற்றும் மீஞ்சூர் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் மூலம் 180 எம்.எல்.டி குடிநீரும், வீராணம் ஏரியிலிருந்து 90 எம்.எல்.டி குடிநீரும், நெய்வேலி சுரங்கத்திலிருந்து 60 எம்.எல்.டி குடிநீரும், நெய்வேலி பகுதியில் ஏற்கனவே உள்ள 22 ஆழ்துளை கிணறுகளிலிருந்து 20 எம்.எல்.டி குடிநீரும், இதே பகுதியில் புதிதாக போடப்பட்டுள்ள 9 ஆழ்துளை கிணறுகளிலிருந்து 10 எம்.எல்.டி குடிநீரும், திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம், பூண்டி,

மீஞ்சூர் பகுதிகளில் உள்ள தனியார் ஆழ்துளை கிணறுகள் மூலம் 110 எம்.எல்.டி குடிநீரும், மாகரல் & கீழானூர் பகுதிகளில் குடிநீர் வாரியம் அமைக்கப்பட்ட 13 ஆழ்துளை கிணறுகள் மூலம் 15 எம்.எல்.டி குடிநீரும், விரிவாக்கப்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் 20 ஆடுனு குடிநீரும், ரெட்டை ஏரி மற்றும் எருமையூர் கல்குவாரி ஆகியவற்றிலிருந்து 2 மாத காலத்திற்கும், அதன் பின்னர் 9/2019 முதல் 11/2019 வரை அயனம்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் ஏரிகளிலிருந்து தலா 10 எம்.எல்.டி வீதம் மொத்தம் 20 எம்.எல்.டி குடிநீரும், ஆக மொத்தம் 525 எம்.எல்.டி குடிநீர் சென்னை மாநகருக்கு வழங்கப்படும்.

மேலும், 400 எம்.எல்.டி திறன்கொண்ட மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், 150 எம்.எல்.டி திறன்கொண்ட நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் போன்றவை முதலமைச்சரால் விரைவில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கப்படவுள்ளது. இவ்விரு திட்டங்களும் முடிவுற்றால் சென்னை மாநகருக்கு தேவையான குடிநீருக்கு நிரந்தரமாக தீர்வு காணப்படும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.