சிறப்பு செய்திகள்

போக்குவரத்துத்துறை ஆய்வாளர்களுக்கு புதிய மின்னணு கட்டண ரசீது எந்திரம் – முதலமைச்சர் வழங்கினார்…

சென்னை:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமைச் செயலகத்தில், உள்துறை சார்பில் சாலை விபத்துகளை குறைக்கவும், போக்குவரத்து அமலாக்கம் மற்றும் ஒழுங்குபடுத்துதலில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தும் பொருட்டும், மாநில அளவிலான பணபரிவர்த்தனையற்ற மின்னணு கட்டண ரசீது வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கும் விதமாக, 5 போக்குவரத்து காவல் ஆய்வாளர்களுக்கு மின்னணு பரிமாற்றம் மூலம் கட்டணம் பெறும் கையடக்க கருவிகளை வழங்கி துவக்கி வைத்தார்.

மாநில அளவிலான பணபரிவர்த்தனையற்ற மின்னணு கட்டண ரசீது வழங்கும் திட்டத்திற்காக பாரத ஸ்டேட் வங்கியின் மூலம் தமிழ்நாடு காவல்துறையின் உபயோகத்திற்காக நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட மின்னணு பரிமாற்றம் மூலம் கட்டணம் பெறும் 750 கையடக்க கருவிகளையும், பராமரிப்பு மற்றும் சேவைகளையும் இலவசமாக பெற்றுக் கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காவல்துறையில் தற்போது, மோட்டார் வாகன சட்டப்படி போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகையை வாகன ஓட்டிகளிடமிருந்து நிகழ்விடத்திலேயே ரொக்கப் பணமாக பெற்றுக் கொண்டு ரசீது வழங்கப்படுகிறது. மேலும், அவ்விடத்தில் பணம் செலுத்த இயலாத வாகன ஓட்டிகளிடமிருந்து நீதிமன்றம் மூலமும் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த முறையில் ரசீதுகளின் தொடர் எண்களையோ மற்றும் அபராதத் தொகைகளை ஏற்கனவே செலுத்திய விவரங்களையோ பெற முடிவதில்லை. மேலும், கடந்த கால காகித முறையிலான பணபரிவர்த்தனைகளை ஆய்வு செய்ய இயலாமல் போகிறது. தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கட்டண ரசீதுகளை மின்னணு மூலம் வழங்கினால், ஏற்கனவே பணம் செலுத்தியவர்கள் விவரங்களையும் எளிதாக ஆய்வு செய்ய இயலும்.

பணபரிவர்த்தனையற்ற மின்னணு கட்டண ரசீது வழங்குவதற்கு தேவையான மென்பொருள், ஆண்ட்ராய்டு கைபேசிக்கான செயலி மற்றும் இணைய வழி பயன்பாட்டிற்கான மென்பொருட்கள் ஆகியவற்றை தேசிய தகவல் மையம் வழங்குகிறது. இந்த கைபேசி செயலி மற்றும் மென்பொருளை வாகன் மற்றும் சாரதி மென்பொருளுடன் இணைக்கப்படுவதன் மூலம் போக்குவரத்து விதி அமலாக்கத்தின் பெருவாரியான செயல்பாடுகளை பெற்றுக் கொள்ளலாம். இதன்மூலம், தேசிய அளவில் தொலைந்த மற்றும் திருடப்பட்ட வாகனங்கள் மற்றும் குற்றவாளிகளை எளிதாக கண்டுபிடிக்கவும், தொடர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை வகைப்படுத்தவும் முடியும்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் வெளிப்படையான போக்குவரத்து அமலாக்கத்தை ஏற்படுத்துவது, பணபரிவர்த்தனையற்ற நிகழ்விடத்து அபராதத் தொகை வசூலிப்பது, சாலை விபத்துகள் மற்றும் விதிமீறல்களை குறைப்பது, பொதுமக்களை சாலைவிதிகளை பின்பற்ற வைப்பது ஆகியவை சாத்தியமாகும். இது பொதுமக்களின் உயிரையும் உடைமையையும் பாதுகாக்கும் முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் நிரஞ்சன் மார்டி, காவல்துறை தலைமை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன், காவல்துறை தலைவர் (போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு) பிரமோத் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.