சிறப்பு செய்திகள்

நீலகிரி, மதுரை, நெல்லை மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமைவிருது – முதலமைச்சர் வழங்கி வாழ்த்து…

சென்னை:-

சென்னை தலைமைச் செயலகத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் நீலகிரி, மதுரை, நெல்லை மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் 2 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் மற்றும் ஆய்வகக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மேலும், 2018-ஆம் ஆண்டுக்கான பசுமை விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருக்கு வழங்கி கவுரவித்தார்.

புரட்சித்தலைவி அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மூலம், நீர் மற்றும் காற்று மாசுபடுவதைத் தடுத்தல், தொழிற்சாலை நிறுவுவதன் பொருட்டு விதிக்கப்படும் சுற்றுச்சூழல் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு உற்பத்தியை தொடங்குவதற்கான இசைவாணை வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.

2014–15ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் துறையின் மானியக் கோரிக்கையில் திருவள்ளூரில் இயங்கும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் அலுவலகம் மற்றும் ஆய்வகத்திற்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் சுமார் 473 சதுர மீட்டர் பரப்பளவில், தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 2 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் மற்றும் ஆய்வகக் கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடனும், மாசு தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களைப் பாராட்டும் வகையிலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆண்டுதோறும் மூன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மூன்று தொழில் நிறுவனங்கள் மற்றும் மூன்று கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்து பசுமை விருதுகளை வழங்கி வருகின்றது.

அந்த வகையில், மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றியமைக்காக 2018-ஆம் ஆண்டுக்கான பசுமை விருதுகளை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் கொ. வீர ராகவ ராவ், , முன்னாள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி ஆகியோருக்கும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

மேலும், மாசு தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கிய தொழில் நிறுவனங்களுக்கான 2018-ஆம் ஆண்டிற்கான பசுமை விருதுகளை திருவாளர்கள் அதானி மரைன் இன்பிராஸ்டரக்சர் டெவலப்பர் பிரைவேட் லிமிடெட், திருவாளர்கள் ஜெயவிஷ்ணு டெக்ஸ் பிராசசர்ஸ் பிரைவேட் லிமிடெட், திருவாளர்கள் தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கும்,சுற்றுச்சூழல் மேம்பாட்டில் சிறந்து விளங்கிய கல்வி நிறுவனங்களுக்கான 2018-ஆம் ஆண்டிற்கான பசுமை விருதுகளை காஞ்சிபுரம் மாவட்டம் – ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி,

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மெப்கோ ஸ்லங்க் பொறியியல் கல்லூரி மற்றும் ராம்கோ வித்யாலயா ஆகிய கல்வி நிறுவனங்களுக்கும், மக்கும் கழிவிலிருந்து உரம் அல்லது மீத்தேன் எரிவாயு தயாரித்தல், மக்காத கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு அனுப்புதல், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்துதல், மரம் நடுதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வினை மக்களிடம் ஏற்படுத்துதல் ஆகியவற்றில் சிறப்பாக செயலாற்றியதற்காக 2018-ஆம் ஆண்டிற்கான பசுமை விருதுகளை தி சென்ட்ரல் பார்க் சவுத், சபரி டெரஸ் அபார்ட்மெண்ட் ஓனர்ஸ் அசோசியேஷன், சீபராஸ் பொலிவார்ட், ரமணீயம் ஈடன், கூஹமுளுசுஹ அசோசியேஷன், ஆகிய அங்கீகரிக்கப்பட்ட குடியிருப்போர் நலச் சங்கங்களுக்கும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் தடையாணையை சிறப்பாக செயல்படுத்த உறுதுணையாக இருந்த மண்டல ஒருங்கிணைப்பாளர்களான உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் / முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோருக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  சிறப்பு பசுமை விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் பண்பாடு துறை அமைச்சர் க. பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் திரு.ஷம்பு கல்லோலிக்கர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உறுப்பினர் செயலர் .டி.சேகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.