சிறப்பு செய்திகள்

மக்களிடம் எதையும் திணிக்க மாட்டோம் – முதல்வர் திட்டவட்டம்…

எட்டு வழிச்சாலை திட்டம் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக மத்திய அரசு கொண்டு வந்த திட்டம். இதற்காக மக்களிடம் எதையும் திணிக்கவோ, பறிக்கவோ அரசு முயலவில்லை என்று சேலம் ஈரடுக்கு மேம்பாலம் திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார். 

சேலம்:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, சேலத்தில் ஏ.வி.ஆர். ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சாலை சந்திப்பு வரையிலான புதிய மேம்பாலத்தை திறந்து வைத்து, அவ்விழாவில் ஆற்றிய உரை வருமாறு:-

சேலம் மாநகரம் வளர்ந்து வருகின்ற ஒரு மாநகரமாக இருப்பதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதன் விளைவாக, அதனை முற்றிலும் குறைக்க வேண்டுமென்பதற்காக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையிலே புரட்சித்தலைவி அம்மா அவர்களிடத்திலே எடுத்துச் சொல்லியதன் விளைவாக, தமிழகத்திலே எந்தவொரு மாநிலத்திற்கும் இல்லாத ஒரு சிறப்பை இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சேலம் மாநகரத்திற்கு தந்திருக்கிறார்.

எங்கெங்கெல்லாம் போக்குவரத்து நெரிசல் இருக்கின்றதோ, எங்கெங்கெல்லாம் சாலை சந்திப்புகள் இருக்கின்றதோ, அங்கெல்லாம் பாலப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட ஒரு மாநகரம் என்று சொன்னால் அது சேலம் மாநகரம்தான் என்று பெருமைப்படக்கூடிய அளவிற்கு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்திலே அனைத்துப் பாலங்களுக்கும் ஒரே காலகட்டத்தில் அனுமதி வழங்கி, இன்றைக்கு பாலப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

சில இடங்களில் நிலம் எடுக்கின்ற பணி இருக்கின்ற காரணத்தினாலே சற்று காலதாமதம் ஏற்பட்டது. ஏற்கனவே இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் திருக்கரங்களால் இந்த ஐந்து ரோட்டில் ரூபாய் 441 கோடியில் அமைக்கப்படுகின்ற இந்த பாலத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்றைய தினம் ஈரடுக்கு மேம்பாலப் பாலப் பணியின் ஒரு பகுதியான ஏ.வி.ஆர். ரவுண்டானா முதல் இராமகிருஷ்ணா சாலை சந்திப்பு வரை 2.5 கி.மீ. நீளமுள்ள இதில் 1.30 கி.மீ. இரு வழிப்பாதை, 1.20 கி.மீ. ஒரு வழிப்பாதை உள்ள புதிய மேம்பாலத்தை உங்கள் அனைவரின் சார்பாக, இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அருளாசியோடு இன்று நான் திறந்து வைத்திருக்கின்றேன்.

இன்றைக்கு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அருளாசியோடு திருவாகவுண்டனூர் ரவுண்டானாவிலே ஒரு உயர்மட்டப் பாலம், ஏ.வி.ஆர் ரவுண்டானாவிலே குரங்குச்சாவடி வரை ஒரு உயர்மட்டப் பாலம், இரும்பாலை சந்திப்பிலே உயர்மட்டப் பாலம் போன்றவைகள் எல்லாம் ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டு மக்களுடைய பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதேபோல, மேட்டூர் எல்லிஸ் பார்க்கின் குறுக்கே உயர்மட்டப் பாலம், அம்மம்மா சமுத்திரம் நரசிங்கபுரம் பாலம் ரூபாய் 5.15 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா, தலைவாசல் கோவிந்தம்பாளையத்தில் வஷ்டவதியின் குறுக்கே உயர்மட்டப் பாலம் ரூபாய் 6.2 கோடி.

இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பணிகள்: நம்முடைய சேலம் மாநகரை போக்குவரத்து நெரிசல் இல்லாத ஒரு நகரமாக உருவாக்க வேண்டுமென்ற அடிப்படையிலே, ஆங்காங்கே இருக்கின்ற அனைத்து இரயில்வே கடவுகளின் குறுக்கே உயர்மட்டப் பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அதில் மணல்மேட்டில் ரூபாய் 50.15 கோடி ரூபாயில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முள்ளுவாடி கேட் இரயில்வே மேம்பாலம் ரூபாய் 83 கோடியில், லீ பஜார் இரயில்வே மேம்பாலம் ரூபாய் 46.35 கோடியில் கட்டுவதற்கு நிலம் எடுக்கின்ற பணி இருக்கின்ற காரணத்தினால் சற்று தாமதம் ஆயிற்று, அந்தப் பணிகள் விரைவில் முடித்துக் கொடுக்கப்படும்.

அதேபோல, தொலசம்பட்டி உயர்மட்டப் பாலம், கொங்கணாபுரம் நரிமேடு சாலை மேம்பாலம், ஜலகண்டாபுரம், சின்னப்பம்பட்டி, வெள்ளாளபுரம், அக்கரைப்பட்டி பாலம், முத்தநாயக்கன்பட்டி உயர்மட்டப் பாலம், மகுடஞ்சாவடி குமாரபாளையம் சாலையில் எடப்பாடி செல்லும் கவுண்டநேரி பாலம், தாரமங்கலம் எருமைக்காரன் வளைவு சாலையில் பாலம் என பல்வேறு பாலப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அதேபோல, அரசினுடைய தேசிய நெடுஞ்சாலையின் சார்பாக நடைபெறுகின்ற பணிகளைப் பொறுத்தவரை, சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று, விபத்து ஏற்பட்ட உயிர்ச் சேதம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக, மகுடஞ்சாவடியில் உயர்மட்டப் பாலப் பணி துவங்கப்பட்டுள்ளது. அரியானூர் பிரிவு ரோட்டில் உயர்மட்டப் பாலம் கட்டுவதற்கு ரூபாய் 45 கோடியில் அடிக்கல் நாட்டப்பட்டு பணி துவங்கியிருக்கின்றது. கந்தம்பட்டி பைபாஸ் ரூபாய் 33 கோடியில் அந்தப் பணியும் இன்றைக்கு துவங்க இருக்கின்றோம்.

ஆத்தூர், அம்மம்மாபாளையம், நரிக்குறவர் காலனி வஷ்டவதியின் குறுக்கே ரூபாய் 5 கோடியில் மேம்பாலம், புழுதிக்குட்ட உயர்மட்டப் பாலம் 3.50 கோடி ரூபாயில், அயோத்தியாபட்டணம் தும்பல் அருகில் உயர்மட்டப் பாலம் 3.50 கோடி ரூபாயிலும் பணிகள் துவங்க இருக்கின்றது.

சேலம் மாவட்டத்தில் இருக்கின்ற இரயில்வே கடவுகளின் குறுக்கே பாலம் கட்ட வேண்டுமென்ற பொதுமக்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று முத்துநாயக்கன்பட்டி இரயில்வே மேம்பாலம், தொளசம்பட்டி, கள்ளிப்பட்டி, வாழப்பாடி, ஓமலூர் பகுதி இப்படி பல்வேறு பகுதிகளில் இருக்கின்ற இரயில்வே கடவுகளின் குறுக்கே பாலம் கட்டும் பணி விரைவில் துவங்கும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

சேலம் மாநகர போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதத்தில், நமது சேலத்திற்கு அருகாமையில் கிட்டத்தட்ட 60 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப் பிரமாண்டமான Bus-Port உருவாக்குவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி முடிந்தவுடன் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கும் என்ற செய்தியை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

போக்குவரத்து நெரிசல் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டுமென்பதற்காக, சேலத்திலிருந்து செங்கப்பள்ளி வரையிலான சாலையை விரிவுபடுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு அதற்குண்டான பணிகள் துவங்கவிருக்கின்றன. இன்னும் பல்வேறு சாலைகள், இங்கேகூட 8 வழிச் சாலை பற்றி சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள், அது விரைவுச் சாலையாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அந்த விரைவுச் சாலையைப் பொறுத்தவரைக்கும் சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்கள், அருகாமையில் இருக்கின்ற கேரள மாநிலத்திற்கு இடையே கனரக வாகனங்கள் தடையில்லாமல் செல்ல முடியும். நம்முடைய தேசிய நெடுஞ்சாலைகள் எல்லாம் கிட்டத்தட்ட 15, 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டவை.

இப்பொழுது 2001-ம் ஆண்டைக் காட்டிலும் 100 சதவிகிதம் வாகன எண்ணிக்கை உயர்ந்துள்ள காரணத்தினால் உலகத் தரத்திற்கேற்ற நவீன சாலைகள் உருவாக்க வேண்டுமென்பதற்காகத்தான் மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. ஆகவே, வளர்ந்து வருகின்ற, தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி, இன்னும் பல தொழில்கள் வருவதற்கு முன்னோடியாக இந்த சாலை அமைப்பதற்குத்தான் நடவடிக்கை மேற்கொண்டார்கள்.

இருந்தாலும் சில பிரச்சினைகள் காரணமாக நீதிமன்றத்தில் இருக்கின்றது. அங்கே இருக்கின்ற நில உரிமையாளர்களிடம் பேசி, சமாதானப்படுத்தி, அவர்களின் சமாதானத்தோடு இந்தத் திட்டத்தை மாநில அரசும், மத்திய அரசும் ஒத்துழைப்பு கொடுத்து நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும். இது ஏதோ எடப்பாடி பழனிசாமிக்கு தனியாக வருகின்ற சாலையாக வைத்துக்கொள்ளக் கூடாது. அது மத்திய அரசின் திட்டம், மாநில அரசின் திட்டமல்ல.

மாநில அரசைப் பொறுத்தவரைக்கும் யாரிடமும் திணித்து, அவர்களிடத்திலே பறித்து திட்டத்தை நிறைவேற்றுவது நோக்கமல்ல. மக்களுடைய உயிர் சேதத்தை, விபத்தை தடுக்க, எரிபொருளை மிச்சச்படுத்த, சுற்றுச்சூழலை பாதுகாக்கின்ற விதத்திலே, பயண நேரத்தை மிச்சபடுத்துகின்ற விதத்திலே தான் இந்தத் திட்டங்கள் துவங்கப்பட்டிருக்கின்றன.

அதேபோல தமிழகம் முழுவதும் பல்வேறு சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்த மத்திய அரசால் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டு, பல்வேறு பணிகள் துவங்கக்கூடிய சூழ்நிலை இருந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து, மற்ற மாநிலங்களை தமிழகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றபொழுது தமிழகம் உள்கட்டமைப்பிலே, சாலை வசதியிலே ஒரு முதன்மை மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டி, சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும் படிப்படியாக வளர்ந்து இந்தப் பகுதி மக்களுக்குத் தேவையான சாலை வசதி, சுகாதார வசதி, புதிய தொழில்கள் துவங்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கும் அம்மாவினுடைய அரசு நடவடிக்கை எடுக்கவிருக்கின்றது.

அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இங்கே ராணுவத் தளவாடங்களுக்கான உதிரிப் பாகங்கள் தயாரிக்கின்ற ஒரு தொழிற்சாலை சேலத்திலே உருவாக்கப்படும் என்ற ஒரு செய்தியை சொல்லியிருந்தார்கள்.

அந்தத் திட்டம் மத்திய அரசின் திட்டமாக இருந்தாலும் அதை விரைந்து பெற்று நம்முடைய மாவட்ட மக்களுக்கு, இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதற்கு அரசு உறுதுணையாக இருக்கும் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து, இது உங்களுடைய அரசு, மக்களுடைய அரசு, மக்களுடைய தேவைகளை நிறைவேற்றுகின்ற அரசு என்பதை தெரிவித்து இந்த நிகழ்ச்சியிலே பங்குபெற்ற அனைவருக்கும் மனமார்ந்த, உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.