சிறப்பு செய்திகள்

3 மாநகரங்களில் முதல் கட்டமாக 2000 மின்சார பேருந்துகள் இயக்கம் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்…

சென்னை:-

சென்னை, மதுரை, கோவை போன்ற 3 மாநகரங்களில் முதல் கட்டமாக 2 ஆயிரம் மின்சார பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் நடைபெற்று வருகிறது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து பள்ளி வாகனங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள செட்டிநாடு பள்ளி வாகனங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஹெல்மெட் போடாமல் வாகனத்தை ஓட்டுபவரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து பரிசீலிக்கப்படும். விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் தான் லைசென்ஸ் ரத்து செய்யப்படுகிறது. பொதுவாக நகரங்களை விட கிராமப்புறங்களில் தான் ஹெல்மெட்போடுவதை கடைபிடிக்காமல் இருக்கிறார்கள். கிராமங்களில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகள் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

2000 மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை, மதுரை,கோவை போன்ற நகரங்களில் முதல்கட்டமாக மின்சார பேருந்துகள் இயக்கப்படும். நடப்பாண்டு 24 லட்சத்து 205 மாணவர்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பள்ளி கல்வித்துறையின் மூலம் இதனை வழங்க இருக்கிறோம். பள்ளி வாகனங்கள் இதுவரை 31 ஆயிரத்து 143 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

இதில் 1009 வாகனங்கள் மாணவர்களின் பாதுகாப்புக்கு உகந்ததாக இல்லாததால் அனுமதிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து அவற்றை சரி செய்த பின்னர் அந்த பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்பட்டது. 1143 பள்ளி வாகனங்கள் சாலைகளில் இயக்க தகுதியற்றதாக கருதப்பட்டுள்ளது. அந்த வாகனங்களை மீறி இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.