தற்போதைய செய்திகள்

அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

முன்னாள் அமைச்சர் செம்மலை, மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாசலம் பங்கேற்பு

சேலம்

சேலம் மாநகர் மாவட்டம், அசேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் ம்மாபேட்டை பகுதியில் உள்ள பட்டை கோயில் அருகில் பகுதி கழக செயலாளர்கள் வி.ஜெயபிரகாஷ், கே.ஆர்.எஸ்.சரவணன் ஆகியோர் தலைமையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.பகுதி கழக செயலாளர்கள் என்.யாதவமூர்த்தி, கே.முருகன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.

இதில் சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.வெங்கடாஜலம், சேலம் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.பாலசுப்ரமணியன், தலைமை கழக பேச்சாளர்கள் எம்.டி.ராஜேந்திரன், எல்.ஜி.முருகேசன், மாநகர் மாவட்ட கழக அவைத் தலைவர் வி.பன்னீர்செல்வம், முன்னாள் மேயர் சவுண்டப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.கே.செல்வராஜ், சக்திவேல், ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.செம்மலை சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

பேரறிஞர் அண்ணா ஒன்றே குலம் ஒருவனே தேவன் கொள்கை முடிவு எடுத்தது சேலம் மண்ணில் தான், அண்ணா பெயரில் இயங்கி கொண்டிருக்கும் இந்த இயக்கத்தை பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கினார். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்டிக் காத்தார், எடப்பாடியார் இந்த இயக்கத்தை எந்த சூழ்நிலையிலும் சேதாரமில்லாமல் காத்துக்கொண்டிருக்கிறார்.

சோதனைகளையெல்லாம் சாதனையாக்கி திறம்பட கழகத்தை வழிநடத்தி கொண்டிருக்கிறார் எடப்பாடியார்.
கழகத்திற்கு சோதனை வந்தபோது கட்டிகாத்தவர் எடப்பாடியார், அதற்கு அவருடைய உண்மை, உழைப்பு, ராஜதந்திரம் தான் காரணம்.

இரட்டை தலைமையினால் ஒரு முடிவெடுக்க முடியாமல் காலதாமதமானது, இதனால் தொண்டர்கள் மத்தியில் தொய்வு ஏற்பட்டது. கழகம் வேகமாக செயல்பட முடியவில்லை, அந்த நேரத்தில் பொதுக்குழுவை கூட்டி ஒற்றைத்தலைமை என்று உருவாக்கப்பட்டு இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடியார் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தி.மு.க.வை எதிர்க்கிற துனிச்சலுடன், போராட்ட குணம் கொண்டதால் தான் எடப்பாடியார் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும்போது பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட உள்ளார்.

கழகத்தில் சேதாரமோ, பிரிவோ இருந்தாலும் கழகம் நிலைத்து நிற்கும். எடப்பாடியார் கரங்களில் இந்த இயக்கம் இயங்கும் வரை கழகத்தை யாரும் ஆக்கிரமிக்க முடியாது. யாரும் அதிகார மையத்தை ஏற்படுத்த முடியாது.

தேர்தல் வாக்குறுதிகளை அளித்து ஆசைக்காட்டி ஆட்சிக்கு வந்த திமுக தற்பொழுது மக்களுக்கு மோசம் செய்கின்றது.
பொதுமக்களுக்கு அடிக்குமேல் அடியாகவும், சுமைக்கு மேல் சுமையாகவும் சொத்து வரி, வீட்டுவரி, குடிநீர் கட்டணம், மின் கட்டணம் உயர்த்தி விட்டனர்.

இதற்காக திமுக எதிர்காலத்தில் மக்களிடம் பதில் சொல்ல வேண்டும். திமுக ஆட்சியில் லஞ்சமில்லாத ஒரு துறை இருந்தால் நான் ஒரு கோடி ரூபாய் பரிசு தருகிறேன் என என சுப்புலட்சுமி ஜெகதீசனின் கணவரே கூறி உள்ளார்.

தற்போது சேலம் மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகமெங்கும் ஸ்டாலின் இனி ஆட்சிக்கு வரவே முடியாது. எடப்பாடியார் தான் நிரந்தர முதலமைச்சராக வருவார் என்று மக்களை கூறுகின்றனர்.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.செம்மலை பேசினார்.

இதற்கு முன்னதாக பேசிய சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.வெங்கடாஜலம், கழக ஆட்சியின் போது சேலம் மாநகராட்சிக்கு 350 கோடி சிறப்பு திதி தந்தோம். அதைத்தான் தற்போது திமுக அமைச்சர்கள் பூமிபூஜை போடுகின்றனர்.

2016ல் மேட்டூர் அணையில் 20 அடி அளவுக்கு தண்ணீர் இருந்தபோது, சேலம் மாநகராட்சி மக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் தந்தோம். ஆனால் தற்போது திமுக ஆட்சியில் 120 அடி தண்ணீர் இருக்கும் நிலையில் குடிநீர் தட்டுபாடு உள்ளது.

கடந்த கழக ஆட்சியில் 10 ஆண்டுகளாக சொத்துவரி உயர்த்தவில்லை. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பலமுறை கூறியபோதும் கழக ஆட்சியில் 8 ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.