தற்போதைய செய்திகள்

அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் கழக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திட்டவட்டம்

கோவை

தேர்தல் அறிக்கைக்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளதால் கழக வேட்பாளர்கள் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் கழக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், உள்ளாட்சி துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ, கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிடும் புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ, மேட்டுப்பாளையம் தொகுதியில் போட்டியிடும் கழக அமைப்புச் செயலாளர் ஏ.கே.செல்வராஜ், சூலூர் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய கழகச் செயலாளர் விபி.கந்தசாமி எம்எல்ஏ, சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் இளைஞரணி மாவட்ட செயலாளர் கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடும் கழக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், உள்ளாட்சித் துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி நேற்று பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் செந்தில் அரசனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் பகுதி தலைவர் எஸ்.எம்.உசேன், ஒன்றிய செயலாளர் டி.சக்திவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

தமிழகத்தில் அற்புதமான திட்டங்கள் தந்து எளிமையான முதலமைச்சராக அனைத்து தரப்பினரும் ஏற்று கொள்ளும் முதலமைச்சராக எடப்பாடி கே.பழனிசாமி இருக்கிறார். தேர்தல் வாக்குறுதியாக அனைத்து குடும்பங்களுக்கும் வாஷிங் மெஷின், இலவச கேபிள், கல்வி கட்டணம் ரத்து, வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை, இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1500, ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் என எண்ணற்ற திட்டங்களை அறிவித்துள்ளதுடன் எதை சொன்னாலும் நிறைவேற்றும் முதலமைச்சராக எடப்பாடி கே.பழனிசாமி உள்ளார். மீண்டும் அவர் தமிழக முதல்வராவது உறுதி.

தொண்டாமுத்தூர் தொகுதியில் அனைத்து தரப்பு மக்களும் ஒருங்கிணைந்து எனக்கு வாக்களிப்பார்கள். மேலும் அதிக படியான வாக்குகள் வித்தியாசத்தில் கழக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். கோவைக்கு 50 ஆண்டுகளில் காணாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் நிறைவேற்றி தந்துள்ளோம். தொண்டாமுத்தூர் தொகுதியில் அரசு கல்லூரி, தாலுகா அலுவலகம், பாலம், சாலைகள் போன்ற எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட கழக நிர்வாகிகள் ஏ.வெங்கடாசலம், என்.கே.செல்வதுரை, எஸ்.மணிமேகலை, என்.ஆர்.ராதாமணி, என்.எஸ்.கருப்புசாமி, இளைஞரணி மாவட்ட செயலாளர் ஆர்.சந்திரசேகர், ஜிகே.விஜயகுமார், டி.சந்திரசேகர், ஒன்றியகுழுத்தலைவர் மதுமதி விஜயகுமார், மற்றும் ஒன்றிய செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.