சிறப்பு செய்திகள்

அனைத்து மக்களுக்கும் அரசு செலவில் தடுப்பூசி – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு

புதுக்கோட்டை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நேற்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் முடிவடைந்த பின்னர் முதலமைச்சர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், இந்த மாவட்ட தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்றையதினம் வரை கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் 10,327 நபர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 9,859 நபர்கள், இறந்தவர்கள் 147 நபர்கள். 21.10.2020 அன்று பாதிக்கப்பட்டவர்கள் 26 நபர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 55 நபர்கள், தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் 321 நபர்கள். 21.10.2020 வரை இம்மாவட்டத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் 1,45,266 நபர்கள். 21.10.2020 அன்று மட்டும் இம்மாவட்டத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் 1,856 நபர்கள். இம்மாவட்டத்தில் 2 பரிசோதனை நிலையங்கள் உள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 17 அரசு மருத்துவமனைகளில் 1,779 படுக்கை வசதிகளும், 3 தனியார் மருத்துவ மனைகளில் 184 படுக்கை வசதிகளும், 13 கோவிட் கேர் மையங்களில் 780 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேவையான நோய்த் தடுப்புப் பொருட்களான N-95 முகக் கவசங்கள், மும்மடிக் கவசங்கள், PPE Kits, Thermal Scans RTPCR Kits, Zinc , மற்றும் Multi vitamin மாத்திரைகள் போதியளவில் கையிருப்பில் உள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளொன்றுக்கு 70 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் வீதம் இதுவரை 10,225 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு சுமார் 4.77 இலட்சம் நபர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, நோய் அறிகுறி தென்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்ததன் விளைவாக இந்நோய்த் தொற்றுப் பரவல் குறைக்கப்பட்டுள்ளது.

2015 மற்றும் 2019-ம் ஆண்டில் நடத்தப்பட்ட தொழில் முதலீட்டாளர் மாநாடுகளின் மூலம் நாட்டு மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது என்ற கேள்வியை எதிர்க்கட்சித் தலைவர் திரு.ஸ்டாலின் எழுப்பி, இந்த அரசைப் பற்றி குறை கூறி, பொய்யான செய்திகளை ஊடகம் மற்றும் பத்திரிகைகள் வாயிலாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இன்று காலையில்கூட புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐடிசி நிறுவனத்தின் தொழிற்சாலையை நான் துவக்கி வைத்துள்ளேன், இதுவே தொழில் முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் கிடைத்த பலனுக்கு ஒரு சான்றாகும்.

இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் 2015-ஆம் ஆண்டு சென்னையில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஐடிசி நிறுவனத்துடன் சுமார் ரூபாய் 1,170 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, இரண்டு அலகுகளாக நிறுவ திட்டமிட்டு, முதல் அலகு

முடிவுற்று இன்றைக்கு திறந்து வைக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மற்றொரு அலகு, பிப்ரவரி மாதம் துவங்கப்படவிருக்கின்றது. தற்போது ஐடிசி நிறுவனத்தில் சுமார் 2,700 நபர்கள் பணிபுரிவதில் சுமார் 2,300 நபர்கள் (85 சதவிகிதம்) முழுக்க முழுக்க கிராமங்களைச் சேர்ந்த பெண்களாவர். இது பெருமைக்குரிய விஷயம்.

2019-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டார்கள் மாநாட்டின் மூலம் அதிகளவில் தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டு, தமிழ்நாட்டில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, பலர் தொழில் தொடங்கியுள்ளனர். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பொறுத்தவரை, 211 தொழில்முனைவோர்களுடன்

303.11 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில்கள் தொடங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டதில், 184 தொழில்முனைவோர்கள் 197.71 கோடி ரூபாய் முதலீடு செய்து தங்களது உற்பத்தியை தொடங்கி உள்ளனர்.புதுக்கோட்டை நகராட்சியில் கொள்ளிடம் ஆற்றை நீர் ஆதாரமாகக் கொண்டு புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 21 வழியோரக் குடியிருப்புகளைச் சேர்ந்த 1,63,900 மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுக் குடிநீர் அபிவிருத்தித் திட்டத்திற்கு ரூபாய் 510 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இந்தப் பணி துவங்கப்படும். புதுக்கோட்டை நகராட்சியில் நிறைய திட்டங்களை அம்மாவின் அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் புதுக்கோட்டை நரிமேடு திட்டத்தில் 1,920 வீட்டுமனை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் ரூபாய் 150.58 கோடி மதிப்பீட்டில் நிறைவு பெற்று குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மூன்று மாதங்களில் அந்தப் பணிகள் முடிவுற்று 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் திறந்து வைக்கப்படும். நத்தம் பண்ணை கிராமத்திற்குட்பட்ட பாலன் நகர் பகுதி-1ல் 192 வீடுகள், இலுப்பூர் தாலுகா, இடையப்பட்டி கிராமம் எல்லைக்குட்பட்ட 96 வீடுகள், இலுப்பூர் தாலுகா, எண்ணை கிராமம் எல்லைக்குட்பட்ட எண்ணை-ஐஐ திட்டப்பகுதியில் 96 வீடுகள், இலுப்பூர் தாலுகா, அன்னவாசல் கிராம எல்லைக்குட்பட்ட அன்னவாசல் திட்டப்பகுதியில்

192 வீடுகள் என வீடுகள் கட்டுகின்ற திட்டத்திற்கான மதிப்பீடுகள் நடைபெற்று வருகின்றன. கஜா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிறைய வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறோம். நத்தம் பண்ணை கிராமம் எல்லைக்குட்பட்ட பாலன் நகர் பகுதியில் 256 வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள்

ரூபாய் 22.29 கோடி திட்ட மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. ஆலங்குடி தாலுகா, பாச்சிக்கோட்டை கிராம எல்லைக்குட்பட்ட ஆலங்குடி திட்டப் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 288 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் ரூபாய் 26.50 கோடி திட்ட மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. குளத்தூர் தாலுகா, வெள்ளனூர் கிராமம் எல்லைக்குட்பட்ட கீரனூர் திட்டப்பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 368 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருமயம் தாலுகா, அரிமளம் எல்லைக்குட்பட்ட திட்டப்பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 84 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதுக்கோட்டை தாலுகா, எல்லைக்குட்பட்ட சந்தைப்பேட்டை திட்டப்பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 640 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. புதுக்கோட்டை தாலுகா, ரெத்தினக்கோட்டை கிராம எல்லைக்குட்பட்ட அறந்தாங்கி திட்டப்பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 120 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. புதுக்கோட்டை தாலுகா, எல்லைக்குட்பட்ட போஸ் நகர் திட்டப்பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 384 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக 35 கோடி ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இப்படி கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் சார்பாக பல வீடுகள் கட்டுகின்ற பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நீண்ட காலமாக புதுக்கோட்டை மாவட்ட விவசாய பெருங்குடி மக்களின் கோரிக்கையான காவேரி -அக்னியாறு, தெற்கு வெள்ளாறு-மணிமுத்தாறு, வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்காக முதல் கட்டமாக 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, நிலம் எடுக்கின்ற பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்திட்டத்திற்கு 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்படும்.

கல்லணை கால்வாய்த் திட்டம் சீர் செய்வதற்காக ரூபாய் 2,664 கோடி மதிப்பீட்டிற்கு ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்டிருக்கிறது. அனுமதி கிடைக்கப்பெற்றவுடன் இந்தத் திட்டமும் நிறைவேற்றப்படும். கவிநாடு பெரிய கண்மாய்க்கு காவேரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தின் வாயிலாக நீர் நிரப்பப்பட வேண்டுமென்று மாண்புமிகு அமைச்சர் அவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை வைத்திருக் கிறார்கள், அந்தத் திட்டமும் நிறைவேற்றப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு அம்மா அவர்கள் இருக்கும்பொழுதே புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவித்தார்கள். மாண்புமிகு அம்மா அவர்கள் மறைந்த பிறகு, அக்கல்லூரி அம்மாவின் அரசால் கட்டி முடிக்கப்பட்டு என்னால் திறக்கப்பட்டு, செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

2021-22-ம் கல்வி ஆண்டிலிருந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 50 மாணவர் சேர்க்கை இடங்களுடன், ஒரு புதிய அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் என்னால் அறிவிக்கப்பட்ட, திருவாப்பூர், கருவேப்பிலங்குறிச்சி ஆகிய இரண்டு ரயில்வே கடவுகளில் இரண்டு இரயில்வே மேம்பாலங்கள், இரயில்வே கடவு எண் 372 மற்றும் 376-க்கு பதிலாக சாலை மேம்பாலம் ஆகியவை கட்டிக் கொடுக்கப்படும்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கிறார்கள். இந்நோய் குணமடைய தடுப்பூசி கண்டு பிடித்தவுடன் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் அரசாங்க செலவிலேயே தடுப்பூசி போடப்படும் என்ற செய்தியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.