சிறப்பு செய்திகள்

அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திடுவோம் என்று உறுதி ஏற்போம் – கழக ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாள் வாழ்த்து

சென்னை

உலகில் அமைதியும், மகிழ்ச்சியும் தழைத்தோங்கிட அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திடுவோம் என்று உறுதி ஏற்போம் என்று கழக ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாள் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளனர்.

கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமானஎடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் “ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி’’ திருநாள் வாழ்த்துச் செய்தி வருமாறு:-

உலகில் தீமைகள் ஒழிந்து அறம் தழைத்தோங்கிட பகவான் மகாவிஷ்ணு, கிருஷ்ணராக அவதரித்த திருநாளை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எங்கள் இனிய “ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி’’ நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளன்று வீட்டில் அழகிய வண்ணக் கோலங்களிட்டு, வாசலில் மாவிலை, தென்னங்குருத்து ஓலைகளால் ஆன தோரணங்களைக் கட்டி, கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த வெண்ணெய், தயிர், பழவகைகள், பலகாரங்கள் போன்றவற்றைப் படைத்து, குழந்தைகளை கண்ணனைப் போல் அலங்கரித்து, குழந்தைகளின் பாதச் சுவடுகளை மாக்கோலத்தில் தங்கள் இல்லங்களுக்குள் பதித்து, அந்தக் குழந்தை கிருஷ்ணனே தங்கள் இல்லத்திற்குள் வந்தது போல் மனதில் நினைத்து மகிழ்ச்சியுடன் இறைவனை வழிபடுவார்கள்.

கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் மக்கள் அனைவரும் கீதையின் உபதேசங்களைப் பின்பற்றி வாழ்ந்திடுவோம் என்றும், அறச் செயல்களை மென்மேலும் வளர்த்து, தீமைகள் அகற்றி, நன்மைகள் பெருகச் செய்து, உலகில் அமைதியும், மகிழ்ச்சியும் தழைத்தோங்கிட அனைவரும் ஒன்றுபட்டு உழைத்திடுவோம் என்றும் உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எங்களது விருப்பத்தினைத் தெரிவித்து, அனைவருக்கும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது வழியில், மீண்டும் ஒருமுறை எங்களது “ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி’’ திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறோம்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளனர்.