தற்போதைய செய்திகள்

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு கொரோனா தொற்று இல்லை – பரிசோதனை முடிவில் தகவல்

சென்னை

பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாவட்டம் முழுவதிலும் சென்று அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி பணியாற்றி வருகின்றார். கொரோனா தடுப்பு பணிகளை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றார்.

மேலும் மாவட்டம் முழுவதிலும் அரசு மற்றும் மாவட்ட அதிமுக சார்பாக நிவாரணப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றார். அரசு நிகழ்ச்சிகள், பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகின்றார். இந்நிலையில் சென்னையில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு நேற்று கொரோனா பரிசோதனை நடந்தது. பரிசோதனை முடிவில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.