சிறப்பு செய்திகள்

அம்மாவின் அரசு, மக்களுக்கான அரசு – முதலமைச்சர் பெருமிதம்

சென்னை

மக்களுக்கான திட்டங்களை இல்லங்களுக்கே கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கும் அரசு அம்மாவின் அரசு என்றும், இது மக்களுக்கான அரசு என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதத்துடன் பேசினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் கொரோனா நோய்த்தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசியதாவது:-

அம்மாவின் அரசு வேளாண் பணிகளுக்கு முன்னுரிமை அளித்துக் கொண்டிருக்கிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கியிருக்கிறோம். சொட்டுநீர் பாசனத் திட்டத்தை ஊக்குவிக்கின்ற விதத்தில் மானியத்துடன் விவசாயப் பெருமக்கள் சொட்டு நீர் அமைப்பை ஏற்படுத்துவதற்கு அரசு முன்னுரிமை அளித்துக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகள், பழங்கள் போன்றவற்றிற்கு உரிய விலை கிடைக்கவும், பால் உற்பத்தியைப் பெருக்கவும் அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த மாவட்டத்தில் சுமார் 349 காலணி தயாரிக்கும் தொழிற்சாலைகளும், 365 தோல் தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருவதாக தெரிவித்திருக்கிறார்கள். இந்த இரண்டு தொழில்களுக்கும் தேவையான உதவிகளை அரசு அளித்துக் கொண்டிருக்கிறது. வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தொழிற்பேட்டைகள் அதிகமாக உள்ளதால், அதிக வேலைவாய்ப்புகள் உருவாகவும், பொருளாதார மேம்பாடு அடையவும் வாய்ப்பாக இருக்கின்றன.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2015-ம் ஆண்டு சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார். இம்மாநாடு, தமிழ்நாட்டிற்கு பல புதிய தொழில்கள் வருவதற்கு உதவிகரமாக இருந்தது. அதைத் தொடர்ந்து, 2019-ஆம் ஆண்டு அம்மாவின் நல்லாசியோடு உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் அம்மாவின் அரசால் நடத்தப்பட்டு, இந்தப் பகுதிகளில் பல்வேறு புதிய தொழில்கள் வருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மூன்று மாவட்டங்களிலும், ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு இருக்கின்றன. எனவே, வேளாண், கல்வி, தொழில் என பல்வேறு துறைகளுக்கும் அரசு முன்னுரிமை வழங்கி, இந்த மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறது என்ற செய்தியை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகிறேன். இது புரட்சித்தலைவி அம்மாவின் அரசு, மக்களுடைய அரசு, மக்களுக்குத் தேவையான திட்டங்களை அவர்களின் இல்லங்களுக்கே கொண்டு சேர்க்க உரிய நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கும் அரசு.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.