தற்போதைய செய்திகள்

`அம்மா மினி கிளினிக்’ திட்டத்திற்கு கிராம மக்களிடம் பெரும் வரவேற்பு -அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு

கரூர்
அம்மா மினி கிளினிக் திட்டம் கிராம மக்களிடையே பெரும் வரவேற்பை ெபற்றுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கூடலூர் மேற்கு ஊராட்சி கோவிலூர், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் கொசூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சு.மலர்விழி தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா வழியில் செயல்படும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் பாதுகாவலராக இருந்து அவர்களின் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை துவக்கி வைத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள 2,000 அம்மா மினி கிளினிக்குகளில் கரூர் மாவட்டத்திற்கு 30 அம்மா மினி கிளினிக்குகளை முதலமைச்சர் வழங்கியுள்ளார். இந்த அம்மா மினி கிளினிக்குகளில் ஒரு மருத்துவ அலுவலர், ஒரு செவிலியர், ஒரு மருத்துவ பணியாளர் பணியாற்றுவார்கள். காலை 8 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 முதல் 7 மணி வரையும் அம்மா மினி கிளினிக் செயல்படும்.

மேலும், இம்மையத்தில் அடிப்படை மருத்துவ வசதிகள், தாய்சேய் நலம், தடுப்பூசி, இரத்த கொதிப்பு போன்ற நோய்களுக்கு அனைத்து விதமான மருந்துகளும் வழங்கப்படும். முதலமைச்சர் கிராம பகுதிகளில் உள்ள ஏழை, எளியோரின் நலனை கருத்தில் கொண்டு கடைக்கோடி மக்கள் வரை சென்றடையும் ஒரு சீரிய திட்டமாக வழங்கியுள்ள அம்மா மினி கிளினிக் திட்டம் கிராமப்புற மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.

இதனைத்தொடர்ந்து, கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட லாலாபேட்டை, குளித்தலை ஒன்றியத்திற்குட்பட்ட சத்தியமங்கலம் ஊராட்சி அய்யர் மலை, சிவாயம் ஊராட்சி இரும்பூதிப்பட்டி, தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட கழுகூர் ஊராட்சி, நாகனூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் உயர்கோபுர மின்விளக்குகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.