தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை செப்டம்பர் மாதம் இறுதிவரை நீட்டிப்பு – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

ஈரோடு

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை செப்டம்பர் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி, வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் தலைமையில், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அம்மா நகரும் நியாய விலைக்கடை வாகனத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கி வைத்தார். மேலும் பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்ததாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அனைத்து துறைகளிலும் பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை. நீட் தேர்வில் 180 கேள்விகளில் மாநில அரசின் புதிய பாடத்திட்டத்தில் இருந்து 174 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் முழுமையாக பெற்றுள்ளது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் காலியாக உள்ள தொழில்கல்வி பிரிவிற்கு விரைவில் பணியிங்கள் நிரப்பபடும்.

இந்த ஆண்டு 15 இடங்களில் தொடக்கப்பள்ளிகளும், 10 இடங்களில் உயர்நிலை பள்ளிகளும் துவங்கப்படும். இதனால் அரசு பள்ளிகளில் 15.3 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. செப்டம்பர் மாதம் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும். 2.5 லட்சம் தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். ஆன்லைன் வகுப்புக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதை மீறி தனியார் பள்ளிகள் வகுப்புகளை நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கழக வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், கோபி ஒன்றிய கழக செயலாளர் சிறுவலூர் எம்.மனோகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.கந்தசாமி, ஆவின் தலைவர் கே.கே.காளியப்பன், நம்பியூர் ஒன்றிய கழக செயலாளர் தம்பி (எ) கே.ஏ.சுப்பிரமணியம், கே.கே.கந்தவேல் முருகன், கோபி நகர கழக செயலாளர் பி.கே.காளியப்பன், துணை செயலாளர் இளங்கோவன், டி.என்.பாளையம் லூர்துசாமி, மாவட்ட மாணவரணி செயலாளர் அருள் ராமச்சந்திரா, மொடச்சூர் செந்தில், சையத் யூசுப், வெள்ளாளபாளையம் வாசுதேவன், பூபதி, ரமணன், தனபால், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.