தற்போதைய செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்புக்கு ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு

சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தகவல்

திருப்பூர்

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்புக்கு ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கார்மல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 707 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 27.83 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை காங்கேயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உ.தனியரசு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என். நடராஜ், திருப்பூர் மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவர் வெங்கு ஜி. மணிமாறன் ஆகியோர் முன்னிலையில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியதாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாணவ, மாணவிகள் சிறந்த கல்வியை பெறும் போது தான் அவர்களின் எதிர்காலம் சிறந்த முறையில் அமையும் என்பதை கருத்தில் கொண்டு இதுபோன்ற எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2013-ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு மடிகணினி வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி தமிழ்நாட்டில் 52,47,000 மடிகணினிகள் வழங்கப்பட்டுள்ளது

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களும் மருத்துவர்கள் ஆகும் வரலாறு இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் உருவாக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதன் மூலம் 405 மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர். மருத்துவ கல்லூரி கட்டணம் மற்றும் விடுதி கட்டணத்தையும் அரசே ஏற்று கொண்டுள்ளது.

இதற்கென ரூ.16 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் 147 மதிப்பெண் பெற்ற மாணவன் மருத்துவர் ஆகும் வாய்ப்பு தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி, ஐ.ஐ.டி. மூலமாக ஜே.இ.இ தேர்விற்கும் இணையதளம் மூலமாக பயிற்சி மற்றும் பட்டய கணக்காளர் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இவ்வாறு சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினார்.