தமிழகம்

அரையன்தோப்பில் ரூ 6 கோடியில் கடலரிப்பு தடுப்புச் சுவர் திட்டம் முதலமைச்சர் தகவல்

சென்னை

கன்னியாகுமரி மாவட்டம்,அரையன்தோப்பில் ரூ 6 கோடியில் கடலரிப்பு தடுப்புச் சுவர் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசியதாவது :-

பொதுப்பணித் துறையின் மூலம் அணைகளை புனரமைக்கும் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம். தூண்டில் வளைவு அதிகமாக ஏற்படுத்த வேண்டுமென்ற மீனவ மக்களின் கோரிக்கையை ஏற்று, அம்மாவின் அரசு, பூந்துறை, கோவளம், அழிக்கால், மேல்மிடாலம், இனையம் கிராமம், அகஸ்தீஸ்வரம் ஆகிய பகுதிகளில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்படுகின்றன. தோவளை பெரியகுளத்தினை ரூபாய் 84 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி துவங்கப்படவுள்ளது. பொழிக்கரை கிராமத்தில் ரூபாய் 10.45 கோடி மதிப்பீட்டில் தொடர் தூண்டில் வளைவுகள் அமைக்கும் பணிக்கான திட்டம் பரிசீலனையில் உள்ளது.

கடலரிப்பைத் தடுக்க தடுப்புச்சுவர் அமைக்கும் திட்டம் அம்மாவினுடைய அரசால் நிறைவேற்றப்பட்டு வருகிறது. கிள்ளியூர் வட்டம், அரையன்தோப்பில் ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் கடலரிப்பு தடுப்புச் சுவர் திட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், பொழிக்கரையில் தடுப்புச் சுவர் கட்டும் பணி அரசின் பரிசீலனையில் உள்ளது. அகஸ்தீஸ்வரம், பழையாற்றின் குறுக்கே ரூபாய் 5.55 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணிக்கான திட்டம் பரிசீலனையில் உள்ளது. கல்குளம் வட்டம், பாம்பூரி வாய்க்காலின் குறுக்கே

ரூபாய் 2.60 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணிக்கான திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. இவ்வாறு பல இடங்களில் தடுப்பணைகள், தடுப்புச் சுவர்கள் அமைப்பது, தூண்டில் வளைவுகள் ஏற்படுத்துவது என அனைத்து வகைகளிலும் மக்களுக்குத் தேவையான நன்மைகளை அம்மாவின் அரசு செய்து வருகிறது.

அதோடு, புதிதாக கிள்ளியூர், திருவட்டாறு என இரண்டு வட்டங்கள் அம்மாவின் அரசால் அறிவிக்கப்பட்டு செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் 2019-20ஆம் ஆண்டில் மட்டும் 3,724 நபர்களுக்கு அம்மாவின் அரசால் வழங்கப்பட்டுள்ளது. முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட 17,060 மனுக்களில் தகுதியான 3,719 நபர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. பட்டா மாறுதலுக்கான 1,15,230 விண்ணப்பங்களில் தகுதி வாய்ந்த 63,009 நபர்களுக்கு அதாவது 55 சதவிகிதம் அளவிற்கு பட்டா மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் சிறப்புக் குறை தீர்க்கும் முகாம்களில் பெறப்பட்ட 46,277 மனுக்களில் 11,366 மனுக்கள் ஏற்கப்பட்டு அவைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன.

இவ்வாறு பல வகைகளிலும் அம்மாவின் அரசு கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு நன்மைகளை செய்து வருகிறது. ஏற்கனவே அம்மா அவர்கள் அறிவித்த திட்டங்களை, அம்மா அவர்களின் மறைவிற்குப் பிறகும் அம்மாவின் அரசு தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.