தற்போதைய செய்திகள்

அலுவலக உதவியாளர்களுக்கு ரூ.1000 மதிப்பில் மளிகை பொருட்கள் – சென்னை மாநகராட்சி ஆணையர் வழங்கினார்

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையிடத்தில் பணிபுரியும் 260 அலுவலக உதவியாளர்கள் மற்றும் டஃபேதார்களுக்கு ரூ.1000 மதிப்பிலான மளிகைப் பொருட்களை ஆணையாளர் கோ.பிரகாஷ் வழங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக நாள்தோறும் சென்னையில் உள்ள வீடுகளுக்கு சென்று திடக்கழிவுகளை சேகரிக்க பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என மொத்தம் 20,000 பணியாளர்கள் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

தூய்மைப் பணிகளில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு மாதச் சம்பளத்துடன் ரூ.2500 ஊக்கத்தொகையாக மாநகராட்சியின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நாள்தோறும் பணிக்கு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவசமாக பேருந்து வசதி செய்து தரப்பட்டுள்ளது. அதேபோன்று அவர்களுக்கு தரமான உணவு மாநகராட்சியின் சார்பில் வழங்கப்படுகிறது. மேலும் தூய்மைப் பணியாளர்களுக்கு வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில முகக்கவசம், கையுறைகள் மற்றும் அவ்வப்போது கைகளை சுத்தம் செய்ய சோப்பு கரைசல் போன்றவை மாநகராட்சியின் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

தூய்மைப் பணியாளர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அவர்களுக்கு தேவையான ஜிங்க் மற்றும் விட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர் ஆகியவை நாள்தோறும் வழங்கப்பட்டு வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களில் மளிகைப் பொருட்கள் தேவைப்பட்ட 5,000 பணியாளர்களுக்கு தன்னார்வலர்கள் மூலமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் தூய்மைப் பணியாளர்களுக்கு மளிகைப் பொருட்கள் தேவைப்பட்டால் தன்னார்வலர்கள் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையகத்தில் 247 அலுவலக உதவியாளர்கள் மற்றும் 13 டஃபேதார்கள், 15 மண்டலங்களில் 243 அலுவலக உதவியாளர்கள் மற்றும் 7 டஃபேதார்கள் என மொத்தம் 510 நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் ரூ.1000 மதிப்பிலான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என ஆணையாளர் தெரிவித்திருந்தார்.

அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையிடத்தில் பணிபுரியும் 247 அலுவலக உதவியாளர்கள், 13 டஃபேதார்கள் என மொத்தம் 260 நபர்களுக்கு ரூ.1000 மதிப்பிலான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ஆணையாளர் கோ.பிரகாஷ், ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் வழங்கினார். தொடர்ந்து மீதமுள்ள மண்டல மற்றும் பிற அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலக உதவியாளர்கள் மற்றும் டஃபேதார்கள் அனைவருக்கும் மளிகைப் பொருட்கள் படிப்படியாக வழங்கப்படும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் (பணிகள்) பி.குமாரவேல் பாண்டியன், உதவி ஆணையாளர் டி.ஜெயஷீலா, விழிப்பு அலுவலர் ஜெகதீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.