தற்போதைய செய்திகள்

ஆட்சிக்கு வந்ததும் தி.மு.க. மக்களை மறந்து விட்டது – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி சாடல்

கோவை, டிச. 4-

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை மறந்து விட்டது என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார்.

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி குனியமுத்தூர் பகுதி கழகத்திற்குட்பட்ட 92-வது வார்டில் சுகுணாபுரம், கிருஷ்ணா நகர், சக்தி மாரியம்மன் கோவில் அருகே, விநாயகர் கோவில் வீதி, பாலமுருகன் கோவில் வீதி, கிருஷ்ணா காலேஜ் ரோடு கொடிக்கம்பம் ஸ்டாப், செந்தமிழ் நகர், மற்றும் இ.பி. காலனி ஆகிய இடங்களில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பிரச்சாரம் செய்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 43 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் கழகத்தின் 50-வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு கட்சி கொடியேற்றி கழகத்தின் மூத்த முன்னோடிகளான சுகுணாபுரம் சுகுமார், செல்வராஜ், செல்லாபாய், ரத்தினசாமி, சின்னசாமி, முத்துசாமி, மயில்சாமி, மேசன் துரை குடும்பத்தார், கலங்கல் சின்னதம்பி குடும்பத்தார், மீசை சேகர், அமீத்கான், சர்தார், நடராஜ், ரங்கசாமி, ஹரிதாஸ் பெஞ்சமின், ராதாகிருஷ்ணன், காதர் உள்பட பலருக்கு நினைவு பரிசு வழங்கி கவுரப்படுத்தினார். பின்னர் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியில 50 ஆண்டு கால வளர்ச்சியை 5 ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் நிறைவேற்றியுள்ளோம். குறிப்பாக போக்குவரத்து நெரிசலை முற்றிலும் போக்க தொலைநோக்கு பார்வையோடு நகரின் அனைத்து முக்கிய சாலைகளும் நான்குவழி சாலையாக மாற்றப்பட்டது. இதனால் விபத்துகள் பெருமளவு குறைந்துள்ளது. மேலும் மேம்பாலங்கள், கூட்டு குடிநீர் திட்டங்கள், விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் தலைமுறை கடந்து பேசும் திட்டங்களை கோவை மாவட்டத்திற்கு தந்து பெருமை சேர்த்துள்ளோம்.

அதுமட்டுமின்றி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், சாலைகள், குறைந்த கட்டணத்தில் கல்வி பயில 5 அரசு கலை கல்லூரிகள், பாதாள சாக்கடை திட்டங்கள், பள்ளி கட்டிடங்கள் புதுப்பிப்பு, தனியாருக்கு நிகராக அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை என பொதுமக்கள் பயன் அடையும் திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். ஆகவே தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் கோவை மாவட்ட மக்கள் இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்.

கழக ஆட்சியில் மக்கள் எதிர்பார்த்த கோரிக்கைகளை நிறைவேற்றியதோடு பல்வேறு திட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற இயலாத தி.மு.க. அரசு 300-க்கும் மேற்பட்ட சாலை பணிகளை நிறுத்தியுள்ளது.

இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை செயல்படுத்தாமல் எங்களை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் மக்களை பழி வாங்குகின்றனர்.

மக்களின் வரி பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகளே, எந்த ஆட்சி வந்தாலும் மக்களுக்கான பணிகளில் நடுநிலையோடு நடந்து கொள்ளுங்கள். ஆட்சியை பிடிப்பதற்காக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிய தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொதுமக்களையே மறத்து விட்டது.

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் மக்களுக்காக உங்களில் ஒருவனாக இருந்து போராடி பெற்று தருவேன். இதற்காக சாலையில் இறங்கி போராடவும் தயங்க மாட்டேன்.

இவ்வாறு சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பேசினார்.