சிறப்பு செய்திகள்

ஆட்சியை முடிவு செய்வது மக்கள்தான்,ஸ்டாலின் அல்ல – முதலமைச்சர் பேட்டி

சென்னை

ஆட்சியை முடிவு செய்வது மக்கள்தான், ஸ்டாலின் அல்ல என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

கேள்வி: கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் 2021-ல் திமுக ஆட்சி அமைக்கும் என்று சபதம் செய்திருக்கிறாரே.

பதில்: அதை மக்கள்தான் முடிவு செய்யவேண்டும். அவர் அல்ல. ஆட்சியை முடிவு செய்வது மக்கள் தான்.

கேள்வி: போலீஸ் லாக்-அப் மரணம் தொடர்ந்து நடந்து வருவது குறித்து…

பதில்: அது தவறான கருத்து. அது விரும்பத்தகாத ஒரு சம்பவம். வேதனையான சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அதை செய்தவர்கள் மீது அரசால் நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு ஆட்சி காலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. உலகளவிலும் இப்படி உள்ளது. அமெரிக்காவிலும் நடந்துள்ளது. சிலர் செய்கிற தவறான செய்கைகளினால் அரசிற்கு கெட்ட பெயர் ஏற்படுகிறதுஇவற்றை சம்பந்தப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். விரும்பத்தகாத சம்பவங்கள் இனிமேல் நடைபெறவண்ணம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்த்துக்கொள்ள வேண்டுமென்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். மனிதர்கள் மனிதர்களாக நடந்துகொள்ள வேண்டும்.

கேள்வி: தேனி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?
பதில்: வானிலை ஆய்வு மைய அறிவிப்பிற்கிணங்க,அரசால் துரித நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கிறது.
கனமழை பொழியும் என்று அறிவித்த பகுதிகளுக்கு உயர் அதிகாரிகளை அனுப்பி, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்த காரணத்தினால், உள்ளாட்சித் துறை அமைச்சர் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரையும், மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டுமென்று நீலகிரி மாவட்டத்திற்கு அனுப்பியிருக்கின்றோம். அதுமட்டுமல்லாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தெரிவித்தார்.