பெரம்பலூர்

ஆட்டோ ஓட்டுநர்கள் 300 பேருக்கு நிவாரண உதவி -ஆர்.டி.இராமச்சந்திரன் எம்.எல்.ஏ வழங்கினார்

பெரம்பலூர்

பெரம்பலூரில் சென்னை ஆட்டோ ஓட்டுநர்கள், முடி திருத்துவோர், சலவை தொழிலாளிகள் என 300க்கும் மேற்பட்டோருக்கு நிவாரண உதவிகளை குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.இராமச்சந்திரன் வழங்கினார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலத்தூர், வரகுபாடி, தெற்கு மாதவி, சின்ன பரவாய், பிலிமிசை, அந்தூர், கிளியூர், ஆகிய கிராமத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சொந்த ஊருக்கு வந்த ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை இன்றி சிரமப்பட்டு வந்தனர்.

இதனை அறிந்த பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும், குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.இராமச்சந்திரன் தாமாகவே முன்வந்து 300க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தலா 10 கிலோ அரிசி மற்றும் 500 ரூபாய் ரொக்கப் பணத்தை பெரம்பலூர் மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கர்ணன், வேப்பூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வமணி, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.