சிறப்பு செய்திகள் மற்றவை

ஆயிரம் சசிகலா வந்தாலும் கழகத்தை அசைக்க முடியாது-முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பரப்பரப்பு பேட்டி

விழுப்புரம், ஜூன் 8-

ஆயிரம் சசிகலா வந்தாலும் கழகத்தை அசைத்துக்கூட பார்க்க முடியாது. ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் செயல்படும் இயக்கமே உண்மையான அண்ணா தி.மு.க. என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

விழுப்புரம் மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான சி.வி.சண்முகம் நேற்று ெசய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பாடப்புத்தகத்தில் இடதுசாரிகள் குறித்து தவறான முறையில் சித்தரித்து பாடம் நடத்துவதாக தி.மு.க. கேள்வி எழுப்புகிறது. அவை 2005-ல் எழுதப்பட்டதாகும். 16 ஆண்டுகாலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பொன்முடி இதுகுறித்து எந்த கேள்வியும் எழுப்பாமல், தற்போது இதுபோன்ற கருத்துக்களை கூறுவது ஏன் என்று தெரியவில்லை. தமிழகத்தில் கடந்த கழக ஆட்சிக்காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் நோய்த்தொற்றில் பாதிக்கப்படாத வகையில் மருத்துவத்துறை, ஊரகத்துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. ஆனால் தற்பொழுது தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகளை திருப்பி அனுப்பும் நிலை தொடர்கிறது.
கொரானா நோயாளிகள் இறந்த பின்பு சடலத்தை தூக்கி எறியும் நிலை ஏற்பட்டுள்ளது. அவை தடுக்கப்பட வேண்டும்.

கொரானாவால் இறந்தவர்களுக்கு பேரிடர் இழப்பு நிதியாக ரூ.4 லட்சம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வீட்டில் சிகிச்சை பெற்று வருபவர்கள் உயிரிழ்நதால் கண்க்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை? மத்திய அரசு தொகுப்பில் இருந்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா நோயாளிகள், உயிரிழப்பு எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறது. எனவே இறப்பை மறைக்காதீர்கள். உண்மையை மறக்காதீர்கள்.

கழகத் தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இந்த இயக்கம் யாரை நம்பியும் இல்லை. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிறகு கழகத்தை உடைக்க நினைத்த அனைவரும் காணாமல் போய் விட்டார்கள்.

சசிகலா புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு உதவியாக வந்தவர் தான். அவருக்கும், கழகத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில் செயல்படும் இயக்கமே உண்மையான அண்ணா தி.மு.க., ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டிய பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்று தேர்தல் ஆனையம் தெளிவாக தெரிவித்து விட்டது. தேர்தல் ஆணையம் சொல்லியது செல்லும் என்று உயர்நீதிமன்றம் கூறியது அதேபோல உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த போது டி.டி.வி. தினகரன் வழக்கில் இருந்து வெளியே சென்று விட்டார். ஆனால் அவ்வழக்கை தொடர்ந்து நடத்தியவர் சசிகலா. உச்ச நீதிமன்றத்தில் தெளிவான தீர்ப்பு சொல்லப்பட்டு விட்டது. இப்போது சசிகலா என்ன வேஷம் போட்டாலும் அவரது எண்ணம் நிறைவேறாது. கருவாடு கூட மீன் ஆகலாம், ஆனால் இனி எப்போதும் சசிகலா கழக உறுப்பினராக கூட வர முடியாது. ஒரு சசிகலா இல்லை, ஓராயிரம் சசிகலா வந்தாலும் கழகத்தை ஆசைக்க முடியாது.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் வாயிலாக பல்வேறு பணிகள் நடைப்பெற்று வருகிறது. ரூ.200 கோடி மதிப்பிலான பல்வேறு விவசாய பணிகள், ஊராட்சி வளர்ச்சி பணிகள், கால்வாய், பள்ளிக்கூடங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது ஆட்சி மாற்றத்தால் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. மக்களுக்காக, விவசாயிகளுக்கான செய்யப்படும் திட்டங்களை, பணிகளை முறையாக முழுமைப்படுத்த வேண்டும், இல்லையென்றால் கழகம் போராடும் நிலை உருவாக்கும். தி.மு.க. அமைச்சர்கள் துறை ரீதியான கூட்டம் நடத்துவதற்கு கூட முதலமைச்சர் அனுமதி பெற்று நடத்தும் நிலை தான் தற்போதைய 30 நாட்கள் தி.மு.க. ஆட்சியின் சாதனை.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

பேட்டியின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் சக்கரபாணி, அர்ஜுனன், சிவக்குமார் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.