தற்போதைய செய்திகள்

ஆரணியில் ரூ.4.5 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகள்-அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ரூ.4.5 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுனில் அண்ணா சிலை முதல் அவுசிங் போர்டு ஸ்ரீராம் திருமண மண்டபம் வரையிலான சென்டர் மீடியா அமைத்து சாலை அகலப்படுத்தும் பணி, அண்ணாசிலை அருகில் நடைபாதை மற்றும் ரவுண்டானா அமைத்தல் என ரூ.4.5 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஆரணி அண்ணாசிலை முதல் ஸ்ரீராம் திருமண மண்டபம் வரையில் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் சென்டர் மீடியா அமைத்து சாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதனால் வழியில் உள்ள 56 மின்கம்பங்கள் அகற்றப்பட்டு மாற்றி அமைக்கப்படவுள்ளது. 3 டிரான்ஸ்பார்மர்கள் மாற்றியமைக்கப்பட்டும், 3 இடங்களில் உள்ள மரங்களை அகற்றியும் இப்பணிகள் நடைபெறவுள்ளது.

மேலும் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் அண்ணாசிலை பகுதியில் நடைபாதை, ரவுண்டானா அமைத்து அழகுபடுத்தும் பணிகளும் நடைபெறுகிறது. ஆரணி கண்ணமங்கலம் சாலை விரிவாக்கப்பணிகள், ஆரணி-செய்யாறு சாலைகள் அகலப்படுத்தும் பணிகள் 37 கிலோ மீட்டர் தூரத்திற்கு 32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தற்போது நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முரளி, செந்தில்குமார், திலகவதி, நகர செயலாளர் எ.அசோக்குமார், மாவட்ட ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் க.சங்கர், ஜி.வி.கஜேந்திரன், ப.திருமால், மேற்கு ஆரணி ஒன்றியக்குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன் மற்றும் அரையாளம் வேலு, ஜோதிலிங்கம், கலைவாணி, குமரன், சரவணன், பாரதி, விநாயகம், பையூர் சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.