மதுரை

ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை மண்டல கழக தொழில்நுட்ப பிரிவு புகார்-வி.வி.ஆர்.ராஜ்சத்யன் பேட்டி

மதுரை

புரட்சித்தலைவி அம்மா, முதலமைச்சரை பற்றி அநாகரிகமாக பேசிய ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் 17 மாவட்டங்களில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ஸ்டாலின் தூண்டுதல் பேரில் தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மா, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரை அநாகரிகமாக பேசி வரும் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் நேற்றுமுன்தினம் மதுரை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்தார்.

இதே போல் திருச்சி, சேலம், ராமநாதபுரம் உள்பட 17 மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் ஆர்.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளிக்கப்பட்டது.

புகார் மனு அளித்த பின்னர் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கடந்த 9-ந்தேதி அம்பத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி புரட்சித்தலைவி அம்மாவை பற்றியும், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையிலும் அவதூறாக பேசியுள்ளார்.

அவர் மீது பொதுவெளியில் பெண்குலத்தை இழிவு செய்தல், அவதூறு பரப்புதல், சட்டம்- ஒழுங்கை கெடுத்தல், வன்முறையை தூண்டுதல் ஆகிய பிரிவின் கீழ் தக்க நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல்துறை ஆணையரிடம் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது.

மேலும் மதுரை மண்டலத்தை சேர்ந்த சேலம், கரூர், நாமக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் உள்பட 17 மாவட்டங்களில் காவல் துறையிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.பாரதி கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டியல் இன மக்களை இதுபோன்று அநாகரிக முறையில் இழிவுபடுத்தி பேசினார். இதனை ஸ்டாலின் கண்டிக்கவில்லை. ஸ்டாலின் தூண்டுதலின் பேரில் உலகத்தில் வாழும் பத்து கோடி தமிழ் மக்களின் தெய்வமாக விளங்கும் புரட்சித்தலைவி அம்மாவை தொடர்ந்து இழிவுபடுத்தி பேசி வருகிறார்.

மேலும் தமிழக மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து உழைத்து வரும் முதலமைச்சரை பற்றியும் அநாகரீக முறையில் பேசி வருகிறார். இதனால் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் திமுக மீது கொதிப்படைந்துள்ளனர்.

அரசியலில் நாகரீகம் கருதி பேச வேண்டும். நாவடக்கம் வேண்டும் இதுதான் பேரறிஞர் அண்ணா சொல்லித்தந்த பாடம். ஆனால் அதையெல்லாம் திமுகவினர் காற்றில் பறக்கவிட்டு அரசியல் நாகரிகம் இல்லாமல் தான்தோன்றித்தனமாக பேசி வருவதை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மறுபடியும் தர்மமே வெல்லும் என்ற அடிப்படையில் இதுபோன்ற அதர்மங்கள் என்றைக்கும் ஜெயிக்காது. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற நிலைப்பாட்டில் அம்மாவின் அரசு மக்களுக்கு சேவையாற்றி வருகிறது. நிச்சயம் வருகின்ற தேர்தல் காலத்தில் ஆணவத்தின் உச்சத்தில் இருக்கும் திமுக கும்பலுக்கு சரியான சவுக்கடியை மக்கள் கொடுக்க தயாராக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.