தற்போதைய செய்திகள்

இடைத்தரகர்களின் தளபதியாக செயல்படுகிறார் மு.க.ஸ்டாலின் – முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் குற்றச்சாட்டு

சேலம்

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலினின் பொய்ப் பிரச்சாரம் செல்லாது என்று சேலத்தில் நடைபெற்ற கழக இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், சேலம் மண்டல கழக தேர்தல் பொறுப்பாளருமான சி.பொன்னையன் பேசினார்.

சேலம் மேற்கு ஒன்றியம் மற்றும் கன்னங்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்கள் கூட்டம் சேலம் சர்க்கார் கொண்டலாம்பட்டி பகுதியில் நடைபெற்றது. சேலம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஏ.வி.ராஜூ தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், சேலம் புறநகர் மாவட்ட கழக அம்மா பேரவை செயலாளரும், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவருமான ஆர்.இளங்கோவன், சேலம் மேற்கு கழக சட்டமன்ற உறுப்பினரும், சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளருமான வெங்கடாஜலம் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சேலம் மண்டல தேர்தல் பொறுப்பாளருமான சி.பொன்னையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஒரு லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்த வடநாடுகளில் உயிரோடு இல்லாத நபர்களின் பெயரில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். தமிழக மக்கள் காரி துப்புவார்கள் என்பதைக்கூட உணராமல் திமுக கனிமொழியும், ராசாவும் அந்த அளவிற்கு ஊழல் செய்துள்ளனர். இவர்கள் அம்மாவை பற்றி பேசுவதற்கு எந்த எந்த தகுதியும் இல்லை புரட்சித்தலைவி அம்மா அவர்களை பற்றி தரக்குறைவாக பேசிய ராசாவை தமிழகத்தை விட்டு விரட்ட வேண்டும்.

இந்த சட்டமன்றத் தேர்தலில் மட்டுமல்ல எந்த சட்டமன்ற தேர்தலிலும் தொடர்ந்து அம்மா அவர்கள் கூறியது போல பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் கூறியது போல தொடர்ந்து இந்த ஆட்சி நடைபெறும். எடப்பாடியார் அந்த அளவிற்கு ஆட்சி நடத்தி வருகிறார். வேளாண் சட்டத்துக்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது.

அதற்கு காரணம் இடைத்தரகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காகவே விவசாயிகளிடமிருந்து பொருட்களை வாங்கி கொள்ளை லாபத்திற்கு விற்கும் இடைத்தரகர்களின் தளபதியாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் இருக்கிறார். அதனால் தான் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் சட்டம் வேளாண் சட்டம். விளைவிக்கும், பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் சட்டம் வேளாண் சட்டம்.

தமிழக அரசின் எண்ணற்ற சாதனைகள் திட்டங்களை பொறுத்துக் கொள்ள முடியாத திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது புதிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். கமலஹாசன் உட்பட எதிர்க் கட்சியினரின் பொய்ப்பிரச்சாரம் இந்த தேர்தலில் செல்லுபடியாகாது.

இவ்வாறு முன்னாள் அமைச்சரும், சேலம் மண்டல தேர்தல் பொறுப்பாளருமான சி.பொன்னையன் பேசினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் பிரவீன், சதீஷ் உள்ளிட்ட கழக தொண்டர்கள், பொறுப்பாளர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.