சிறப்பு செய்திகள்

இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டம்

சென்னை

தற்போது வரை ஊரடங்கை நீடிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என்றும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டங்களுக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்பட்டு வருகின்ற சூழ்நிலையால் உலகமே இன்று அதிர்ந்து போயிருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல, நம் மாநிலத்தில் மட்டுமல்ல, உலகத்திலுள்ள 210 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் பல லட்சம் பேர் இறந்திருக்கிறார்கள்.

ஆனால் அம்மாவின் அரசு சரியான நடவடிக்கை எடுத்ததன் காரணத்தினால், உயிரிழப்பு குறைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவிலேயே அதிக பரிசோதனைகள் செய்த ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் இந்த நோய்ப் பரவலைத் தடுக்க முடியும். ஆகவே, பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும்.

இது ஒரு புதிய நோய், கண்ணுக்குத் தெரியாத வைரஸ், ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாக பரவக்கூடிய நோய் என்று மருத்துவ நிபுணர்கள், உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத் துறை, ஐ.சி.எம்.ஆர் தெரிவிக்கின்றார்கள். அந்த கருத்தின் அடிப்படையில், மக்கள் என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத் துறை பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. அந்த வழிமுறைகளையெல்லாம் பின்பற்றினால் நிச்சயமாக இந்த நோய்ப் பரவலைத் தடுத்து, படிப்படியாக குறைத்து இயல்பு நிலைக்கு கொண்டு வரலாம்.

இன்றைக்கு தொழிற்சாலைகள் 100 சதவீதம் பணியாளர்களைக் கொண்டு இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டு விட்டது. அவர்களுக்குத் தேவையான கடன் வசதியைக் கொடுப்பதற்கு மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்திலிருக்கின்ற குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 350 கோடி ரூபாய் கடனுதவி கொடுப்பதற்கு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

கேள்வி: ஈரோடு மாவட்டம் பிரிக்கப்படுமா?

பதில் : அதெல்லாம் தவறான தகவல், எந்த மாவட்டமும் இனி பிரிக்கப்பட மாட்டாது.

கேள்வி: முழு ஊரடங்கை நீட்டிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

பதில் : தற்போது வரை அதுபோன்ற எந்த எண்ணமும் அரசுக்கு இல்லை.

கேள்வி: மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சமூக பரவல் ஏற்பட்டுவிட்டதா. அதை கட்டுப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா?

பதில் : எல்லாவற்றையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். இது தவறான தகவல். இப்படிப்பட்ட தகவல்களுக்கு பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினரும் முன்னுரிமை கொடுக்கக்கூடாது. இப்படிப்பட்ட தகவல்கள் வருகின்றபொழுது நீங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, இது தவறு என்று மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.