தற்போதைய செய்திகள்

இப்போது மவுனமாக காட்சியளிப்பது ஏன்?

தி.மு.க.வுக்கு. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி

மதுரை,
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 7 பேர் விடுதலை செய்வோம் என்று கூறி இப்போது மௌனமாக காட்சியளிப்பது ஏன் என்று தி.மு.க.வுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட விவசாய பிரிவு சார்பில் கலந்தாய்வு கூட்டம் அம்மா கோவிலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ ஆலோசனை வழங்கினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

காவிரி மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்து அதன்மூலம் இதுதான் என் வாழ்நாள் சாதனை என்று அம்மா அவர்கள் கூறினார். அதனைத்தொடர்ந்து அம்மா அரசை தலைமை தாங்கி நடத்தி வந்த எடப்பாடியார் விவசாய மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செய்தார். தொடர்ந்து ஐந்து ஆண்டு காலமாக வேளாண் துறைக்காக கிரிஷ் கர்மான் விருதினை தமிழகம் பெற்றது.

உழவர் பாதுகாப்பு திட்டத்தை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உருவாக்கினார். இதில் ஒரு கோடியே 47 லட்சம் விவசாயிகள் உறுப்பினராக இருந்தனர். அதில் அவர்களது வாரிசுகளும் உறுப்பினர்களாக இருந்து ஏறத்தாழ இரண்டு கோடிக்கும் மேலான விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை தொடர்ந்து அம்மா அரசு செயல்படுத்தி வந்தது.

விவசாய மக்களின் நீண்டநெடிய பிரச்சினையான காவிரி பிரச்சினையில் மாபெரும் சட்டப்போராட்டம் நடத்தி காவிரி ஆணையத்தை எடப்பாடியார் அமைத்தார். அதன்மூலம் அவருக்கு காவிரி காப்பாளர் என்ற பட்டத்தை விவசாயிகள் சூட்டினர்.
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கருத்து சுதந்திரத்திற்கு பாடம் எடுத்தனர்.

இப்போது ஆட்சிக்கு வந்தவுடன் அந்தப் பாடத்தை மறந்துவிட்டு கருத்து சுதந்திரத்தை நசுக்குகின்றனர். சாமானிய மக்களின் எதிர்பார்ப்பை சுட்டிக்காட்டிய அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவின் கருத்துக்கு தடை செய்து அடக்குமுறையை ஏவுகின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார்கள்.

ஆனால் இன்றைக்கு தேசிய தேர்வு முகமை எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி போன்றவைகளுக்கு தேசிய தகுதி மற்றும் நீட் நுழைவுத் தேர்வுகளை செப்டம்பர் 5-ம்தேதி நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். இதற்கு ஸ்டாலின் என்ன பதில் கூற போகிறார்.

7 பேர் விடுதலை குறித்து திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது இது அடிமை அரசு. உரிமை குரல் எழுப்ப முடியாது என்று பேசினார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஏழு பேர் விடுதலை உறுதி என்று கூறினார்கள்.

ஆனால் தற்போது பரோலில் விட்டுவிட்டு 7 பேர் விடுதலையில் மவுனமாக காட்சி அளிக்கிறது தி.மு.க.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இக்கூட்டத்தில் உசிலம்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், மாநில அம்மா பேரவை துணைச்செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய கழக செயலாளர் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், மாவட்ட கழக பொருளாளர் திருப்பதி உட்பட பலர் கலந்து கொண்டன