சிறப்பு செய்திகள்

இரணியல் கூட்டுக் குடிநீர் திட்டம் விரைவில் முடிவடையும் – முதலமைச்சர் உறுதி

சென்னை

இரணியல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் விரைவில் முடிவடையும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசியதாவது :-

கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. நாகர்கோவில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் ரூபாய் 76 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும். அழகிய பாண்டியபுரம் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும். இரணியல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், இரணியல் பேரூராட்சி மற்றும் 319 கிராம குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் ரூபாய் 174 கோடி மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது

71 சதவிகிதப் பணிகள் முடிவுற்றுள்ளன. அனைத்துப் பணிகளையும் விரைவாக செயல்படுத்த வேண்டுமென்று உத்தரவிடப் பட்டு பணிகள் துரிதமாக குடிநீர் வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணிகள் முடிவுற்றவுடன் இந்தப் பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட நீர் வழங்கப்படும்.

நாகர்கோவில் நகராட்சியில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் ரூபாய் 251 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. தற்பொழுது 77 சதவிகிதப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. குழித்துறை நகராட்சிக் குடிநீர் அபிவிருத்தித் திட்டம் ரூபாய் 31 கோடி திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தபட்டு ஒப்பந்தப் புள்ளி இறுதி செய்யப்பட்ட பின்பு பணிகள் ஆரம்பிக்கப்படும். இவைகளெல்லாம் மக்களுக்கு நிலையான, பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்காக அம்மாவின் அரசால் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களாகும்.

புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இருந்தபொழுது மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு முன்னுரிமை அளித்தார். பெண்கள் சுயமாகத் தொழில் தொடங்கி பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டுமென்று சுயஉதவிக் குழுக்களை ஏற்படுத்தி அதற்கு அதிகக் கடனுதவி வழங்கினார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் 6,564 குழுக்கள் 39,403 நபர்களை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. கடந்த மூன்றாண்டுகளில் இந்தக் குழுக்களுக்கு ரூபாய் 1,082.47 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், ரூபாய் 527 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 4,202 பயனாளிகளுக்கு ரூபாய் 210.37 கோடி வழங்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த 3 ஆண்டுகளில் 6,590 உழைக்கும் மகளிருக்கு ரூபாய் 16.45 கோடி மானியத்தில் அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் உள்ள இல்லங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 608 குக்கிராமங்களில் 63,680 வீடுகளுக்கு இணைப்புகள் கொடுக்கப்படவுள்ளது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.