தமிழகம்

இஸ்லாமியர்களின் உரிமையை கழக அரசு விட்டுக் கொடுக்காது – முதலமைச்சர் உறுதி

சென்னை

எந்த சூழ்நிலையிலும் இஸ்லாமியர்களின் உரிமைகளை கழக அரசு விட்டுக்கொடுக்காது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கோயம்புத்தூர் மாவட்டம், குறிச்சியில் இஸ்லாமிய பெரியோர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் பேசியதாவது.

இஸ்லாமியப் பெருமக்களுக்கு நாங்கள் என்றென்றும் அரணாக இருந்து பல்வேறு நன்மைகளை செய்து கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். புனித ரமலான் நோன்புக் கஞ்சி தயாரிக்க மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களுக்கு 5,145 மெட்ரிக் டன் விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு விலையில்லாமல் சந்தனக் கட்டைகள் கொடுக்கின்றோம்.

மாவட்ட காஜிக்களுக்கு ரூபாய் 20 ஆயிரம் மதிப்பூதியம், உலமாக்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் 1,500 ரூபாயை 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்கிய அரசு அம்மாவின் அரசு. ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள மத்திய அரசு கொடுத்து வந்த நிதியை ரத்து செய்தபோதிலும் அம்மாவின் அரசு தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறது.

மேலும், ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள அரசு வழங்கும் தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென்று இஸ்லாமிய பெருமக்களும் ஜமாத் தலைவர்களும் வைத்த கோரிக்கைகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் பலமுறை என்னிடம் தெரிவித்து வந்ததைக் கருத்தில்கொண்டு, ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள வழங்கப்படும் 6 கோடி ரூபாய் இனி வருங்காலங்களில், ரூபாய் 10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.

என்னைப் பொறுத்தவரை, நான் பிறந்ததிலிருந்து இன்று வரை சாதி, மத பாகுபாடுகளை பார்ப்பதில்லை. ஒவ்வொரு மதமும், தெய்வங்களும் அவரவர்களுக்குப் புனிதமானது. தமிழ் மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அந்த உரிமை உண்டு, அதைப் பாதுகாப்பது எங்கள் அரசின் கடமை, அதில் எள் முனையளவும் நாங்கள் தவற மாட்டோம், உறுதியாக இருப்போம். சில அரசியல்வாதிகள் தங்கள் சொந்த நலனுக்காக இதைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.

மற்றவர்கள் இடையில் புகுந்து இடையூறு செய்வதை ஒருபோதும் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். எனவே, இஸ்லாமிய பெருமக்களாகிய நீங்கள் அச்சப்பட வேண்டியதில்லை. நான் அரசியலுக்காக இங்கே இதைப் பேசவில்லை, என் மனதில் பட்டதைப் பேசுகிறேன். என்னை யாரும் விலை கொடுத்து வாங்கவும் முடியாது, அடிமைப்படுத்தவும் முடியாது.

பேரறிஞர் அண்ணா சொன்னதைப்போல, பதவி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு மாதிரி என்று நினைப்பவன் நான். இஸ்லாமிய சமூகத்தில் எனக்கு மிக நெருக்கமான நண்பர்கள் உண்டு. ரமலான் நோன்பு, பக்ரீத் பண்டிகையின்போது அவர்கள் எங்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கும் உணவை நான் மட்டுமன்றி, அனைவரும் பகிர்ந்து உண்போம்.

சென்னையிலுள்ள என்னுடைய, முதலமைச்சர் வீட்டில் மூன்று வேளையும் நாள்தோறும் 300 நபர்களுக்கு மேற்பட்டவர்கள் உணவருந்திக் கொண்டிருக்கிறார்கள். இதை எதற்காக தெரிவிக்கின்றேனென்றால் அனைவரையும் ஒரு குடும்பம் போல் நான் பாவிக்கிறேன். மதத்தின் பேரிலோ, ஜாதியின் பேரிலோ ஒருபோதும் நாங்கள் பிரித்து எண்ணியது கிடையாது. அதற்கு நாங்கள் அனுமதியும் கொடுக்கமாட்டோம்.

இன்னும் சொல்லப்போனால், மத்திய அரசு சில சட்டங்கள் கொண்டு வரும்போது அச்சப்படுகிறார்கள். மேடையில் அமர்ந்திருக்கும் ஜமாத் தலைவர்களெல்லாம் பல்வேறு ஆதாரங்களைக் கேட்கின்றார்களே என்று என்னிடம் தெரிவித்தபோது, யாரும், யாரையும் விரட்ட முடியாது.

இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்வதற்கு உரிமையுண்டு. எங்கள் அரசு முழுமையாக பாதுகாக்கும். எந்தச் சூழ்நிலையிலும் நாங்கள் உங்கள் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம், திடமாக இருப்போம் என்று நான் உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன். சிலர் அரசியலுக்காகப் பேசுவார்கள். ஆனால், நாங்கள் அவ்வாறு அல்ல, சொல்லும் செயலும் ஒரே நிலையில் இருக்கும், மாற்றுக் கருத்தே கிடையாது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.